×

ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்: புவிகண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும்!

ஸ்ரீஹரிகோட்டா: ரிசாட்-2பிஆர்1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாயந்துள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 22 மணி 45 நிமிட கவுன்ட் டவுன் நேற்று மாலை 4.40க்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மாலை 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 37 டிகிரி கோணத்தில் 576 கி.மீ தொலைவில் அதன் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ரிசாட் -2பிஆர்1 செயற்கைகோளுடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைகோள்களும், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9  செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ள 75வது ராக்கெட் மற்றும், பி.எஸ்.எல்.வி ரகத்தில் விண்ணில் ஏவப்படும் 50வது ராக்கெட் என்ற பெருமைகளை பெற்றுள்ளது. இதேபோல், 2019ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவும் 6வது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : launch ,PSLV , PSLV, rocket, ISRO, Sriharikota
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!