×

கொலீஜியத்தின் பரிந்துரை அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி காலி பணியிடங்களை 6 மாதத்திற்குள் நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் 410 நீதிபதி பணியிடங்களை கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அகில இந்திய புள்ளி விவரங்கள் படி உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 1079 நீதிபதி பணியிடங்களில் தற்போது 669 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மொத்தம் 410 காலி இடங்கள் உள்ளன. இதில் 213 நீதிபதி பணியிடங்கள், அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மீதமுள்ள 197 நீதிபதி பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றத்திடம் இருந்து பரிந்துரை பெறப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

காலியிடங்களை நிரப்ப 213 நீதிபதிகளின் பெயர்களை கொலீஜியம் அனுப்பிய போதும் அதன் மீது முடிவு எடுக்காமல் மத்திய சட்ட அமைச்சகம் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இனிமேல் கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்கள் தொடர்பாக மத்திய அரசு விரைவாக முடிவு எடுக்கும்படி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அரசும், கொலீஜியமும் ஒப்புக் கொண்ட நீதிபதிகளை 6 மாதத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் உயர்நீதிமன்றங்களுக்கு 65 நீதிபதிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டில் 115 நீதிபதிகளும், 2018ல் 108 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Supreme Court ,Collegium , Collegiateum, Recommendation, High Court Judge, Vacancies, Supreme Court Order
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...