×

காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் எலும்புக்கூடாய் நிற்கும் எரிந்த கார்கள்

காரைக்குடி: காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் தீ விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில் நிற்கும் 2 கார்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலை சூரக்குடி பகுதியில் கடந்த வருடம் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக இறங்கி உயிர் தப்பினர். அக்காரின் உரிமையாளர்கள் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை எரிந்த காரை எடுத்து செல்லவில்லை. அதேபோல் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடந்த மாதம் கார் ஒன்று, ஓடும் போதே ‘தீ’ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து குன்றக்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அக்காரும் இன்னும் சாலையோரம் அகற்றப்படாமல் இருக்கிறது.

அதே பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காரும் தீ பிடித்து எரிந்தது. அதை மட்டும் உரிமையாளர்கள் எடுத்துசென்ற நிலையில் மற்ற 2 கார்களும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இது இப்பகுதியை கடக்கும் மற்ற வாகனஓட்டிகளுக்கு ஒரு வித பீதியை கிளப்புகிறது. மேலும் ஆவுடைபொய்கை கிராமத்தில் இருந்து டி.சூரக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5க்கும் மேற்பட்ட விபத்துகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் விபத்து பகுதி, அபாயம் என சைன் போர்டுகள் வைப்பதுடன், தீப்பிடித்த கார்களையும் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karaikudi - Trichy ,lane road ,Karaikudi ,Trichy , Karaikudi, Trichy
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி