×

தமிழகத்தின் முதலாவது திருநங்கை நர்ஸ் விளாத்திகுளம் ஜிஹெச்சில் பணி துவக்கம்

விளாத்திகுளம்: தமிழகத்தின் முதலாவது திருநங்கை நர்ஸ்  அன்பு ரூபி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நேற்று தனது பணியை துவக்கினார். அவருக்கு டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, தேன்மொழியின் ஒரே மகனாக பிறந்தவர் அன்புராஜ். பள்ளிப் பருவத்தில் 13வது வயதில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. அன்புராஜ் படிப்படியாக திருநங்கையாக மாறினார். உற்றார், உறவினர்கள் கேலி செய்தாலும், பெற்றோர் காட்டிய அரவணைப்பால் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். படிப்பில் நன்கு கவனம் செலுத்திய அன்பு ரூபி சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்ததும், செவிலியர் கல்வி படிக்க முடிவு செய்தார்.

அரசு கலந்தாய்வில் பங்கேற்று, திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு ராஜா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் படிப்பில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படித்த போது அவரது தந்தை ரத்தினபாண்டி காலமானார். தாயாரின் ஊக்கத்தால் செவிலியர் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகள் செவிலியராக பணியாற்றினார். அதேவேளையில் மருத்துவமனை மேலாண்மையில் எம்பிஏ படிப்பை தொலைதூரக் கல்விமூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு செவிலியர் பணிக்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தின் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற அன்பு ரூபி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே தனக்கு பணி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியராக பணியமர்த்தப்பட்ட அன்பு ரூபியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் பிரிசில்லா பூர்ணிமா, மருத்துவர் பேபி பொன்அருணா, சித்த மருத்துவர் தமிழ் அமுதன், செவிலியர் ஒருங்கிணைப்பாளர் ராணி பிரேமா, அலுவலக கண்காணிப்பாளர் பொன்ஸ்டன் ரோட்ரிகோ, நிர்வாகப் பிரிவு உதவியாளர் முருகன், அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
செவிலியர் அன்பு ரூபி (25) பேசுகையில்; ‘எனது தந்தை சோடா கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கு அவரது கண் பார்வை பறிபோனது. எனது தாய் விவசாயக் கூலி வேலை செய்கிறார். உறவினர்களும், ஊராரும் என்னை வெறுத்து ஒதுக்கிய போதும் பெற்றோர் அரவணைத்தனர். பள்ளியில் படிக்கும்போதே பல சவால்களை சந்தித்தேன். அவற்றைத் தாண்டி இப்போது அரசு பணி நியமனம் பெற்றுள்ளேன்.

திருநங்கையாக இருந்து அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் என்னுடைய சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணி நியமனம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் இயன்றவரை விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நல்ல முறையில் செவிலியர் பணியின் மூலம் சேவை செய்வேன். நாட்டில் உள்ள அனைத்து திருநங்கைகளும் அரசு வழங்கியுள்ள திட்டம் மற்றும் சலுகைகளை  பயன்படுத்தி பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.

Tags : nurse ,Tamil Nadu , Nurse
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...