×

சேலம் குரும்பப்பட்டியில் பாகனை மிதித்து கொன்ற மதுரை ஆண்டாள் யானை ஆனைமலையில் உற்சாகம்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற மதுரை ஆண்டாள் யானை, ஆனைமலையில் பிற யானைகளுடன் சேர்ந்து உற்சாகமாக இருக்கிறது. மதுரை அழகர் கோயிலில் சுவாமி ஊர்வலத்திற்கும், பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் ஆண்டாள் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு சில நேரங்களில் திடீரென மதம் பிடித்ததால், ஆசி வாங்க வரும் பக்தர்களை தூக்கி தரையில் போட்டு மிதித்து கொன்றது. இதுபோல், 3 பக்தர்களை கொன்றுள்ளது. இதையடுத்து, ஆண்டாள் யானையை சமவெளி பரப்பில் வைத்து பராமரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வைத்து, ஆண்டாள் யானையை வனத்துறை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு ஆண்டாள் யானையை கொண்டு வந்து, தனியாக ஓரிடத்தில் வைத்து பரமரித்தனர். பாகனாக காளியப்பனும், உதவியாளராக பழனியும் நியமிக்கப்பட்டு, யானைக்கு உரிய உணவு வழங்குதல், தினமும் காலை, மாலையில் பூங்காவின் உட்புறத்தில் நடைபயிற்சி அளித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதித்து, உரிய மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், 68 வயதான ஆண்டாள் யானைக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இச்சூழலில் கடந்த 4 ஆண்டுக்கு முன், பூங்கா ஊழியர் பத்மினி என்பவரை இந்த யானை மிதித்து கொன்றது. இருந்தாலும், ஆண்டாள் யானையை தொடர்ந்து குரும்பப்பட்டி பூங்காவில் வைத்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம், கால்நடை மருத்துவர் பிரகாஷ் பரிசோதித்த போது, திடீரென ஆக்ரோஷமடைந்த யானை, மருத்துவரை தும்பிக்கையால் மடக்கி பிடித்தது. அருகே நின்றிருந்த பாகன் காளியப்பன், யானையின் பிடியில் இருந்து மருத்துவரை மீட்டார். டாக்டரை விடுவித்த யானை, பாகன் காளியப்பனை தூக்கி தரையில் போட்டு மிதித்து கொன்றது. இதையடுத்து ஆண்டாள் யானையை திருச்சி அல்லது ஆனைமலை நல்வாழ்வு முகாமிற்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்பேரில் தமிழக வனத்துறை, கோவை ஆனைமலை முகாமிற்கு ஆண்டாள் யானையை மாற்ற உத்தரவிட்டது. கடந்த 5ம் தேதி ஆண்டாள் யானையை மிக பாதுகாப்பாக லாரியில் ஏற்றி ஆனைமலைக்கு அனுப்பினர். ஆனைமலையில் ஏற்கனவே 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானைகளுடன் ஆண்டாள் யானையையும் கொண்டு சென்று விட்டனர். இதனால், ஆண்டாள் யானை உற்சாகமடைந்துள்ளது.

சக யானைகளுடன் நல்லவிதமாக பழகும் யானை, ஆற்றில் இறங்கி உற்சாக குளியல் போட்டு, முகாமில் வனத்துறையினர் வழங்கும் சத்துணவை சாப்பிட்டு வருகிறது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், ஆண்டாள் யானையை பராமரித்த பழனியும் ஆனைமலைக்கு சென்று, யானையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆண்டாள் யானை, ஆனைமலைக்கு சென்றபின் அங்குள்ள பிற யானைகளுடன் நல்ல விதமாக பழகி வருகிறது. இதனால், உற்சாகமாக இருக்கிறது. நடைபயிற்சி, குளியல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறது. சேலத்தில் வழங்கப்பட்டது போலவே, அங்கும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. சக யானைகளின் சேர்க்கை கிடைத்ததால், ஆண்டாள் யானை மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது,’ என்றனர்.

Tags : Madurai Anaimalai , Anaimalai
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...