×

பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநி, திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை மகாதீபம்

பழநி: திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பழநி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில், பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த டிச.4ம் தேதி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. மாலை 5.15 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோயிலில் 4 மூலைகளில் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருள, மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றுதல் நடந்தது. பின்னர் திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடந்தது. திருக்கார்த்தியையொட்டி நேற்று அதிகாலை முதலே பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது.

இதன் காரணமாக ஒருவழிப்பாதையாக மாற்றி, மலைக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், கீழிறங்கும் பக்தர்கள் படிவழிப்பாதை வழியாகவும் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் : முருகனின் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருப்பரங்குன்றம் மலை மேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மலையில் தீபம் ஏற்றுவதற்காக மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 350 லிட்டர் நெய் கொண்டு, 100 மீட்டர் காடா துணியாலான திரி கொண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில், தங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் மக்கள் அகல்விளக்கு ஏற்றினர்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று இரவு 7 மணி அளவில் தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் புறப்பட்டு, சன்னதி தெரு வழியாக வலம் வந்து பதினாறுகால் மண்டபம் அருகே எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் ராமசாமி, ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Devotees ,Arokhara ,Thiruparankundram ,Palani , Palani
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது