×

சேலத்தில் 15 மாதங்களில் 165 குழந்தை திருமணங்கள்: குழந்தைகள் நலக்குழும தலைவர் அதிர்ச்சி தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில், 165 குழந்தை திருமணம் நடந்துள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் கூறினார். சேலம் மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் கொண்டப்பநாயக்கன்பட்டி தனியார் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் 60 பேருக்கு, குழந்தைகள் நலகுழுமத்தின் சார்பில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் தாஸ் பயிற்சி அளித்தார்.

அப்போது தாஸ் பேசியதாவது: 18 வயதிற்குட்ட சிறுமிகளை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த 15 மாதங்களில் மட்டும் 165 குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதுதவிர 75 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர் அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் ஆகிய பகுதிகளில், குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. எங்களது ஆய்வில் போதிய படிப்பறிவின்மை, பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

குழந்தை திருமணத்தினால் அவர்களது வளர்ச்சி மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. குழந்தைபேறு அடையும்போது உயிரிழக்கவும் நேரிடுகிறது. குழந்தை திருமண சட்டத்தை மீறுவோர் மீது 2 ஆண்டு சிறை தண்டனையும், ₹1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள், உறவினர்கள் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தாஸ் பேசினார்.

Tags : Salem , Child marriages
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை