×

மதுவுக்கு தந்தை அடிமையானதால் மாற்றுத்திறனாளி விஏஓ தற்கொலை: கும்மிடிப்பூண்டி, திருச்சியில் சோகம்

சென்னை: தந்தை மது பழக்கத்துக்கு அடிமையானதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி விஏஓ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் (27). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கொல்லானூரில் விஏஓ.வாக வேலை பார்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர், கண்பார்வையற்றவர். இவருடன் தாய் வசித்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் திருச்சி. நிர்மலின் தந்தை, திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதால் அங்கேயே வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மகனை பார்க்க கும்மிடிப்பூண்டிக்கு வந்தார். அப்போது, வெளியே சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்தபோது, தந்தை மது அருந்தியிருந்தாராம். இது நிர்மலுக்கு தெரியவர, மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் தந்தை, திருச்சிக்கு சென்று விட்டார். பிறகு விசாரித்ததில் தந்தை மதுவுக்கு அடிமையான தகவல் தெரியவந்தது. அன்று முதல், நிர்மல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நிர்மலின் தாய் வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜன்னலில் உள்ள கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் நிர்மல். வெளியே சென்றிருந்த தாய், வீட்டுக்கு வந்ததும், மகனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, நிர்மலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது பழக்கம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.


Tags : suicide ,VAO ,Aluthram , For alcoholism, because his father , addicted, alter ego VAO, suicide
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!