உள்ளாட்சி தேர்தலில் மல்லுக்கட்டு ஆரம்பம் அதிமுகவிடம் 60% இடங்கள் கேட்போம்: * பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி * அதிமுக தலைமை அதிர்ச்சி

சென்னை: பாஜ பலமாக உள்ள இடங்களில் அதிமுகவிடம் இருந்து 60 சதவீதம் இடங்களை கேட்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பாஜ உயர்மட்ட குழுக்கூட்டம் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, ேகசவ விநாயகம், மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான முன்தயாரிப்புகள் பாஜவில் மிகவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. எந்த பகுதியில் பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை பற்றி பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களை கேட்பது என்பது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. களப்பணிக்கு போக வேண்டியதுதான் உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கட்சிகள் பலமாக இருக்கிறதோ, அந்த கட்சிகள் அதிமான இடங்களை பெற்றுக்கொண்டு, மற்ற கட்சிகளுக்கு விகிதாச்சார அடிப்படையிலோ அல்லது அந்த கட்சி பலம் பொருந்தி இருக்கக்கூடிய பகுதிகளின் அடிப்படையிலோ பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று நம்புகிறேன். பாஜவின் பலம் என்ன, அதிமுகவின் பலம் என்ன, கூட்டணி கட்சிகளின் பலம் என்ன, திமுகவின் கூட்டணி கட்சிகளின் பலம் என்ன என்பதை நாங்கள் கணக்கு எடுத்து இருக்கிறோம்.  சதவீதம் அடிப்படையில் இடங்களை கேட்க மாட்டோம். நம்பர் அடிப்படையில் இடங்களை கேட்போம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது வேறுபடும். கன்னியாகுமரியை பொறுத்தவரை 60 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை பாஜ கேட்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எந்த மாவட்டத்துக்கு யார் பொறுப்பு?

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27  மாவட்டங்களுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட அளவிலான  குழுக்கள் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோவை மாவட்டத்தில்  முன்னாள் மாநில செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத்துக்கு  பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாநில செயலாளர்  கரு.நாகராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

>