×

தமிழகம் முழுவதும் உள்ள குடோன், கடைகளில் வெங்காயத்தை தேடும் சிஐடி

* பதுக்கலை தடுக்க அதிரடி சோதனை
* கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை என துணை கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: வெங்காயம் பதுக்கலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மார்க்கெட் மற்றும் கடைகளில் சிவில் சப்ளை சிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாட்டால் கிலோ ஒன்றுக்கு ₹180 முதல் 200 வரை சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வை காரணம் காட்டி இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக சிவில் சப்ளை சிஐடி போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து சிவில் சப்ளை சிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலீப் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மாவட்ட வாரியாக அதிகாரிகள் மார்க்கெட், கடைகள், மண்டிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிவில் சப்ளை சிஐடி துணை கமிஷனர் சாந்தி, டிஎஸ்பி ஜான்சுந்தர் ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்ெகட்டில் உள்ள வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வெங்காயம் விற்பனை கடைகளில் சோதனை நடந்தது.

சோதனையின் போது சிவில் சப்ளை சிஐடி துணை கமிஷனர் சாந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் வெங்காயம் பதுக்கல் குறித்து எழுந்து புகார்களை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் சிவில் சப்ளை சிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக மார்க்கெட், கடைகள், குடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்த வியாபாரிகள் 50 டன் வரையில் வெங்காயம் இருப்பு வைக்கலாம். சில்லறை வியாபாரிகள் 10 டன் வரை இருப்பு வைக்கலாம். அதற்கு மேல் அவர்கள் இருப்பு வைக்க கூடாது. அதற்கும் வியாபாரிகள் முறையாக  ரசீது வைத்திருக்க வேண்டும். மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் சோதனை நடந்து வருகிறது. வெங்காயத்திற்கான ரசீதுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் அரசு நிர்ணயித்த இருப்பை காட்டிலும் கூடுதலாக பதுக்கி வைத்திப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 4ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெங்காயம் பதுக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள்  9840979669 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அதேபோல் மாவட்ட வாரியாக அந்தந்த சிவில் சப்ளை சிஐடி இன்ஸ்பெக்டர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தற்போது தமிழகம் முழுவதும் 33 குழுக்கள் வெங்காயம் பதுக்கல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : CITON ,stores ,Tamil Nadu ,CIT ,Goodon , All over Tamil Nadu, Goodon, Stores, Onion looking, CIT
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...