×

நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா?: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்து, அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அச்சாணியைச் சேர்ந்த ரமேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் பணியிடங்கள் அதிகளவு காலியாக உள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 16 லட்சம் பேர் உள்ளனர். இங்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மையங்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் நல மையம் என 47 மருத்துவமனைகள் உள்ளன. சராசரியாக 47 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், 30 நிரந்தர பணியிலுள்ள டாக்டர்களும், 7 ஒப்பந்த டாக்டர்களுமே உள்ளனர். ஒவ்வொரு டாக்டரும் இரு மருத்துவமனைகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆபரேஷன் தியேட்டர் இருந்தாலும், அதற்குரிய பணியாளர்கள் இல்லை.

குறிப்பாக, இரவு நேரங்களில் பிரசவம் பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏழைகள் அதிகளவு செலவழித்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. கே.புதூர் மகப்பேறு மையத்தில் டாக்டர் பணியில் இல்லாததால், கடந்த செப்.14ல், 22 வயது இளம்பெண் பிரசவத்தின்போது இறந்தார். எனவே, நீதிமன்றம் தலையிட்டு நகர்ப்புற சுகாதார மையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பவும், இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர், நகர்ப்புற சுகாதார மையங்களில் எவ்வளவு காலிப்பணியிடம் உள்ளது? இந்த மையங்களில் இரவுப்பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனரா? அவர்களின் பணி நிலவரம் உள்ளிட்டவை குறித்து அரசு தரப்பில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2020 ஜன.13க்கு தள்ளி வைத்தனர்.

Tags : health centers ,Doctors ,branch ,eCourt , In urban, health centers, doctors , night work, answer grade, eCourt branch, directive
× RELATED குற்றால அருவிக்கு வரும்...