×

உள்ளாட்சி தேர்தலில் பதவிகளை ஏலம் விட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த அறிவிக்கைகள் வெளியிட்டு, அதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலமிடப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாநில  தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிருவாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் இதுபோன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதனை உணரச்செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதுபோன்ற செயல்கள் நிகழாவண்ணம் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : elections ,government ,State Election Commission , Legal action , auction ,posts in local elections
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...