×

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் தமிழகத்தின் முதல் திருநங்கை நர்ஸ் அன்பு ரூபி

விளாத்திகுளம்:  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, தேன்மொழியின் ஒரே மகனாக பிறந்தவர் அன்புராஜ். 13வது வயதில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. அன்புராஜ் படிப்படியாக திருநங்கையாக மாறினார். பெற்றோர் காட்டிய அரவணைப்பால் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். பிளஸ் 2வுக்கு பிறகு பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படித்த போது அவரது தந்தை ரத்தினபாண்டி காலமானார். தாயாரின் ஊக்கத்தால்  படிப்பை நிறைவு செய்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகள் நர்சாக பணியாற்றினார். அதேவேளையில் மருத்துவமனை மேலாண்மையில் எம்பிஏ படிப்பை தொலைதூரக் கல்விமூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலையில் நடந்த நர்ஸ் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு (25) நர்ஸ் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் நர்சாக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற அன்பு ரூபி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே தனக்கு பணி வழங்க  வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நிலைய மருத்துவர் பிரிசில்லா பூர்ணிமா மற்றும் மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,nurse , Anubhu Ruby, first transgender nurse, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...