×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம்

* விண்ணை பிளந்தது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ முழக்கம்
* 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. ஜோதிப் பிழம்பான மகாதீபத்தை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. இந்நிலையில், அகந்தையை நீக்கி, அருள் ஒளி பெருக்கும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பான அண்ணாமலையார் தீபத்திருவடிவில் காட்சிதரும் ‘மகாதீப விழா’ நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது. காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலை 2.30 மணி முதல் 3.45 மணிவரை சுவாமிக்கு பரணி அபிஷேகம் நடந்தது. மேலும், மகா மண்டபத்தில் பிரதோஷ நந்தியின் வலதுபுறம் ஐந்து மடக்குகள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பரிச்சாரக சிவாச்சாரியார்கள் மூலம் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ரதவிளக்கு 2ம் பிரகாரம், 3ம் பிரகாரம் வழியாக வந்து அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக, சொர்ணபைரவர் சன்னதியில் மடக்கு தீபம் காட்சியளித்தது.

பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன், ஏகனாகவும் அனேகனாகவும் அருள்பாலித்து (பஞ்சமூர்த்திகளாக) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மகாதீப பெருவிழா நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, மதியம் 2 மணியளவில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.40 மணியளவில், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் அடுத்தடுத்து எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரம் தீப தரிசன மண்டபத்தில் காட்சியளித்தனர். பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.58 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். கார்த்திகை தீபத்திருவிழாவின் ேபாது மட்டுமே, சில நிமிடங்கள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வர் எழுந்தருளியபோது, கோயில் பிரகாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

மேலும், மாலை 6 மணியளவில் தங்க கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சிவனின் திருவடிவாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில், ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அப்போது, அண்ணாமலையாரை போற்றும் துதி, பாமாலை, சங்கொலி முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகாதீபம் ஏற்றினர். அக இருள் நீக்கி, அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக, அகன்று விரிந்து வானுயர்ந்த தீபச்சுடராக மலை உச்சியில் காட்சியளித்தார். தீப தரிசனத்தை தொடர்ந்து, கோயில் அனைத்து பிரகாரங்களும் தீபஒளியால் ஜொலித்தது. நகரெங்கும் வீடுகளில் நெய்தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை நகரமே தீப ஒளியால் ஜொலித்தது. அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி (காட்டன் துணி), 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்பட்டது. தீபத்திருவிழாவை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. விழாவில்  13 ஆயிரம் போலீசார் மற்றும் எஸ்டிஎப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள், 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.

Tags : Mahadeepam ,mountain ,Karthikai Deepathiru Festival ,Thiruvannamalai , Mahadeepam mounted, 2,668-foot high mountain
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...