×

நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

புதுடெல்லி: நிர்பயாவழக்கில் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான பணிகள் திகார் சிறையில் மும்முரமாக நடந்து வருகிறது. தூக்கு கயிறு, தூக்கு மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்தவர்கள் அவரை கடுமையாக தாக்கி, பஸ்சிலிருந்து தூக்கி வீசினர். இதில் படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின் இறந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் வேண்டுமென்ற கோரிக்கையை எழச் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், ராம் சிங் விசாரணையின்போது சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். 17 வயது சிறுவன் 3 ஆண்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு கடந்த 2015ல் விடுதலையானான். மற்ற 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சமீபத்தில் ஐதராபாத் பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ளது. வரும் 29ம் தேதி நிர்பயாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதற்குள் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைள் திகார் சிறையில் மும்முராக நடந்து வருகிறது. குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா மட்டும் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று திகார் சிறைக்கு கொண்டு வந்தனர். அவன், மற்ற குற்றவாளிகளான முகேஷ் சிங், அக்சய் ஆகியோருடன் 2ம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

4வது குற்றவாளி வினய் சர்மா 4ம் எண் சிறையில் உள்ளான். சிசிடிவி கேமரா மூலமாக கைதிகளின் அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, பீகாரின் பக்சர் சிறையில் இருந்து தூக்கு கயிறு திகார் சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு கடந்த 2013ல் தீவிரவாதி அப்சல் குருவை தூக்கிலிட்ட கயிறும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. 3ம் எண் சிறையில் தான் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுகின்றனர். அங்கு ஏற்கனவே தூக்கிலிடுவதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மாவின் கருணை மனு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறது. அதை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

குற்றவாளிகளில் ஒருவனான அக்சய் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை ஏற்றுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு வரலாம். வழக்கு விசாரணை முடியும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே கடந்த ஆண்டு மற்ற குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அப்போது அக்சய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது கடைசிக் கட்டத்தில் தண்டனையை தள்ளிப்போடும் முயற்சியாக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : convicts , 4 convicts , Nirbhaya rape case, executed soon?
× RELATED ராஜிவ் கொலையில் ஆயுள் சிறை பெற்று...