×

மது அருந்துபவர்களுக்கு விரைவில் ப்ரீபெய்டு கார்டு : ஆந்திர அரசு உத்தரவு

திருமலை: மது அருந்துபவர்களுக்கு ப்ரீபெய்டு மது கார்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்தது. ஆந்திர மாநில அரசு மது விலக்கை அமல்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக அனுமதியில்லாமல் கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் மது விற்பனை செய்து வந்த பெல்ட் ஷாப் என அழைக்கக்கூடிய 43 ஆயிரம் கடைகளை முற்றிலுமாக மூடப்பட்டது. மேலும், 4 ஆயிரத்து 380 மதுக்கடைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தனியார் உரிமம் ரத்து செய்துள்ளது. இதனால், 20 சதவீத மதுக்கடைகளை குறைத்து 3,500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இக்கடை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி தனியாருக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 40 சதவீதம் குறைக்கப்படும். இதற்காக பழைய உரிமம் வைத்திருப்பவர்களுக்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறும்.

மது அருந்துவதற்காக ‘லிக்கர் கார்டு’ என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ப்ரீபெய்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கார்டை பெறுவதற்கு ஆதார் மற்றும் பேன் கார்டு நகல் மற்றும் ₹5 ஆயிரம் கொடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த கார்டு 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். கார்டு வாங்கினால் ஒரே நேரத்தில் கார்டில் உள்ள பணம் முழுவதும் மது வாங்க முடியாது. ஒரு கார்டை வைத்து 3 மது பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும். இதுபோன்ற புதிய நிபந்தனைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் மது கார்டு விரைவில் ஆந்திர மாநில அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது.

ஏற்கனவே, மது விலையை அதிகளவில் உயர்த்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மது விற்பனை 23 சதவீதம் குறைந்திருக்கிறது. பீர் விற்பனை 54 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், விற்பனை குறைந்தாலும் விலையேற்றம் காரணமாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறையவில்லை. மது குடிப்பவர்களுக்கு அதன் எண்ணத்தை மாற்றுவதற்காகவே இந்த விலை ஏற்றம் மற்றும் நிபந்தனைகள் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh ,prepaid card,Andhra Pradesh government order
× RELATED ஆந்திர மாநிலம் கடப்பாவில்...