×

பழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார்: பிரான்ஸ் வல்லுனர் குழு ஆய்வு

பழநி: பழநி மலைக்கோயிலில் நடந்து வரும் 2வது ரோப்கார் கட்டுமான பணியை பிரான்ஸ் நாட்டு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச், தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலில் பழநி கோயிலில்தான் ரோப்கார் அமைக்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 2004ல் துவங்கப்பட்ட ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். ஜிக்-பேக் முறையில் மேலே செல்லும்போது 15 பேர், கீழே இறங்கும் போது 13 பேர் என, ஒரு மணி நேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே தற்போதைய ரோப்காரில் பயணிக்க முடியும். இதனால் வார விடுமுறை தினம், கார்த்திகை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. மேலும் மழை, காற்று காலங்களில் இயக்க முடியாது.எனவே, பழநி மலைக்கோயிலுக்கு கூடுதலாக 2வது ரோப்கார் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்டகால போராட்டத்திற்கு பின் சுமார் ரூ.73.83 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள ரோப்கார், நவீன வசதிகளுடன் 1 மணி நேரத்தில் சுமார் 1,200 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மழை, காற்று காலங்களிலும் தடையின்றி இயக்க முடியும்.

பூமிபூஜை முடிவுற்ற நிலையில் தற்போதைய ரோப்காரின் கிழக்கு பகுதியில் 2வது ரோப்கார் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் நிறைவடைந்தவுடன் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2வது ரோப்காருக்கான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ‘போமா ஹைடெக்’ என்ற நிறுவனம் பணியை மேற்கொண்டு வருகிறது. பழநி கோயில் சார்பில் 2வது ரோப்கார் பணியை கண்காணிக்கவும், மேலாண்மை செய்யவும் ‘இப்காட் எரிக்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் முதற்கட்ட கட்டுமான பணிகளை இரு நிறுவனங்களை சேர்ந்த திட்ட மேலாளர்கள் க்ளோயி (பிரான்ஸ்), ரவீந்தர் சிங் நேற்று ஆய்வு செய்தனர். கட்டுமான பணிக்கான வரைபடத்தை ஆராய்ந்து அதில் உள்ளதுபோல் கட்டுமானம் கட்ட அறிவுறுத்தினர்.ஆய்வின்போது ரோப்கார் திட்ட மேலாளர் வெங்கடாசலம், பொறியாளர் வெங்கட்ராமன், நாச்சிமுத்து, பழநி கோயில் பொறியாளர்கள் குமார், பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Second Ropcar ,Palani Mountain Second Ropcar ,French Expert Group ,France , Palani Mountain, Second Ropcar, France Expert, Panel Study
× RELATED பழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு