அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போக்குவரத்து இணை கமிஷனர் ஜெயகௌரி, உதவி கமிஷனர் சுரேந்திரநாத், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 100 கடைகளை அதிரடியாக அகற்றினர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தி வைத்திருந்த 100 கார்கள், 300 பைக்குகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். பின்னர், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கடைகள் வைக்க கூடாது, வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘நடைபாதையில் கடைகள் வைக்கப்படுவதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களால் நடந்து செல்ல முடியவில்லை. பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரை தொடர்ந்து இடையூறாக இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. நடைபாதையில் வாகனங்கள் மற்றும் கடைகள் இருக்கக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கி எச்சரித்துள்ளோம்’ என்றனர்.

Tags : shops ,Anna Nagar ,Thirumangalam Action ,Thirumangalam ,Corridor , 100 shops ,occupying , corridor , Thirumangalam, Anna Nagar,bikes fine
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...