×

ரூ.2.66 லட்சம் செலவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

குன்னூர்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 77 பேர் ரூ.2.66 லட்சத்திற்கு தனியாக மலை ரயில் பதிவு செய்து, குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பயணம்செய்து மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டி வரையிலான மலை ரயிலில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லலாம். எனவே சில சுற்றுலா பயணிகள் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா செல்கின்றனர்.நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலை ரூ.2.66 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மலை ரயில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் நேற்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பாரம்பரிய பழமையான இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 77 சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் குன்னூர் பணிமனையை பார்வையிட்டு பாரம்பரிய இன்ஜின்கள் இயங்குவது குறித்து அறிந்துகொண்டனர். இந்த பயணம் குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறியதாவது: இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளை பார்வையிட்டு வந்தோம். தற்போது குன்னூரில் பழமை வாய்ந்த பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசிக்க அதிகம் ஆர்வமாக உள்ளது என்றனர்.

Tags : Ooty ,mountain train , Foreign, tourists ,traveling,Ooty ,mountain train
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்