×

உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்

மும்பை: உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என சிவசேனா கட்சி தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது.

இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள். இது போன்று வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் விரைவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே பேட்டி

இந்நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் சில உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். அதனை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம். மசோதாவைப் பார்த்து யாராவது பயந்தால் அவர்களின் சந்தேகத்தை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகி என கூறுவதா? தாங்கள் மட்டுமே நாட்டை காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக்கொண்டிருப்பது மாயை, என கூறியுள்ளார். மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 17 சிவசேனா எம்பிக்கள் வாக்களித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தததை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். மாநிலங்களவையில் சிவசேனாவுக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : State House ,Shiv Sena , Citizenship Amendment Bill, Shiv Sena, Uttav Thackeray, Rajya Sabha, Congress
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை