×

வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பீதி கொல்கத்தா ஏற்றுமதி நிறுவனம் திவால்?.. ரூ120 கோடிக்கு பின்னலாடை அனுப்பிய உற்பத்தியாளர் அதிர்ச்சி

திருப்பூர்: கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு பிரபலமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் திருப்பூர், பெங்களூர், குவாலியர் உட்பட பல்வேறு நகரங்களில் கிளைகள் அமைத்து இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு திருப்பூர் ,பெங்களூர் உட்பட பல்வேறு பின்னலாடை  ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்ட  ஆடைகளை பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உட்பட பல்வேறு தொழில் நெருக்கடியால் 2ம் தர ஆடைகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வந்தது. வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைகளுக்கு உரிய பணம் கிடைக்கவில்லை.

இதனால் இந்தியாவில் கொள்முதல் பெற்ற ஆடைகளுக்கு உரிய காலத்தில் பணம் கொடுக்க முடியாமல் திணறியது.  பின்னலாடைகளை கொடுத்த நிறுவனங்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடி திவால் நோட்டீஸ் பெற்றது. தங்களுடைய நிறுவனம் திவால் ஆனது குறித்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு  தகவல் தெரிவித்தது. இந்நிறுவனத்திற்கு திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடைகளை உற்பத்தி செய்து கொடுத்த வகையில் ரூ120 கோடி வர வேண்டியுள்ளது.

கொல்கத்தா பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் திவால் ஆன தகவலை அறிந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முழுமையான தகவலை அறிய கொல்கத்தா சென்றுள்ளனர். இவர்கள் திருப்பூர் திரும்பினால் மட்டுமே இந்நிறுவனம்  திவால் ஆனதா? என்பது குறித்து  முழுமையான தகவல் தெரியவரும். இச்செய்தியால் திருப்பூர் பகுதியில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Tags : manufacturer ,bankruptcy ,Kolkata ,export company ,news spread ,bankruptcy company , Whats Up, Kolkata, Export Company, Bankruptcy
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?