×

இணையதள தொடராக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெளியிட தடை கோரி தீபா வழக்கு: இயக்குனர் கௌதம் மேனன் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைக்கோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற  இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என  தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உயர்  நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம்  இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தீபா தரப்பில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று  வருகிறது. ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, இந்த இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது இயக்குனர்  கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Tags : Deepa , Jayalalithaa, Cory Deepa, Director Gautam Menon, Icort
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...