×

வாகனங்களை ஏலமிட்ட தொகை ரூ68.33 லட்சம் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறைக்கு வழங்கப்பட்டது

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றில் நிறுத்தி  வைத்துள்ளதை தொடர்ந்து, வாகனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறையால் சாலைகளில்  போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத வாகனங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

இதில், முதற்கட்டமாக 7,875 வாகனங்களை சென்னை காவல்துறை அப்புறப்படுத்தி, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.இதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏலம் நடத்தி தீர்வு செய்யப்பட்டதில், நிகரத்தொகையாக ரூ2.14 கோடி  கிடைக்கப்பெற்றது. இத்தொகையில், 75 சதவிகித பங்கீட்டு தொகையான ரூ1.60 கோடியினை சென்னை காவல் துறைக்கு மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் சாலைகளில் கண்காணிப்பு கேமரா  பொருத்தும் பணிக்கு வழங்கப்பட்டது.

தற்போது, இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்ட யாரும் உரிமை கோராத 3,079 வாகனங்களை சென்னை மாநகராட்சி ஏலம் நடத்தி தீர்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற நிகரத்தொகையான ரூ91.11 லட்சத்தில் 75 சதவிகித பங்கீட்டு தொகையான  ₹68.33 லட்சத்தை சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது, ₹68.33 லட்சத்திற்கான காசோலையினை சென்னை  மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் வழங்கினார். அப்போது, இயந்திரப் பொறியியல் துறை மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் உடனிருந்தார்.

Tags : CCTV camera, police
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்