×

கூலி உயர்வு பிரச்னை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் ஸ்டிரைக்...விசைத்தறியாளர்கள் திட்டம்

சோமனூர்: கூலி உயர்வு பிரச்னை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், கோவை மாவட்டம் சோமனூர் பகுதியிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலும் விசைத்தறிகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலானோர், கூலி அடிப்படையில் நெசவு செய்யக்கூடிய விசைத்தறியாளர்களாக உள்ளனர். இவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு மற்றும் நூல்களை பெற்று துணி உற்பத்தி செய்து கொடுத்து மீட்டர் அடிப்படையில் அதற்கான  கூலியை பெறுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கி வருகின்றனர்.

 கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒப்பந்த கூலியை கூட இதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை. தற்போது 6 ஆண்டு கடந்த நிலையில் அடுத்தகட்ட கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை  விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் கடந்த மாதம் இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, இதனால்,  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் பிரேமா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து  கொள்ளவில்லை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் 24ம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு 15 சதவீத விசைத்தறிகளை பழைய இரும்புக்கு விற்றுவிட்டு விசைத்தறி தொழிலை நடத்த முடியாமல் மூடி உள்ளனர். இதனால், பல விசைத்தறி கூடங்கள்  இடித்து அகற்றப்பட்டுள்ளது. சில விசைத்தறி கூடங்கள் வாடகை வீடுகளாக மாற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள விசைத்தறியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளும்  விசைத்தறியாளர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் அடுத்த மாதத்தில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என  தெரிவித்துள்ளனர்.

Tags : districts ,strike ,Coimbatore ,Tirupur , 2 lakh powerloom strike in Coimbatore and Tirupur districts
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...