×

வெங்காயம், மளிகை பொருட்கள் விலை உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதல்; அனைத்து ரக வாழைத்தார்களும் விலை வீழ்ச்சி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதுபோல கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாப்பேட்டை  பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதிகளிலும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்கு உற்பத்தியாகும் வாழைத்தார்கள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் வாழை சாகுபடி நல்ல முறையில் நடந்துள்ளது. கும்பகோணம் பகுதியில் பூவன், செவ்வாழை, கற்பூரவள்ளி, நேந்திரன் உள்ளிட்ட அனைத்து வாழைகளும் தற்போது தார் விட்டுள்ள நிலையில் போதிய விலை போகாததால் அறுவடை செய்யவில்லை.

 இதனால் வாழைத்தார்களில் வாழைத்தார்  பழமாகி வருகிறது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் அளவிலுள்ள வாழைத்தார்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை போகவில்லை. மிகவும் குறைந்த விலைக்கே வாழைத்தார்கள் போகிறது.இதுகுறித்து வாழை விவசாயி குமார் கூறுகையில், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்தாண்டு கரும்பு விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அளவுக்கு அதிகமாக வாழை சாகுபடி செய்ததால்  தார்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ரூ.80க்கு விலை போன வாழைத்தார்கள், தற்போது ரூ.25க்கு விலை போகிறது.

வாழைத்தார்களை வெட்டி சுத்தப்படுத்தி வாகன வாடகை, ஆள் கூலி, வெட்டும்போது வீணாகும் வாழைகளுக்காக  செய்யும் செலவுக்கும், வாழைத்தார்கள் விற்பனை செய்யும் விலைக்கும் கட்டுப்படியாகததால் 2 ஆயிரம் ஏக்கர் வாழைத்தார்களை மரத்திலேயே விட்டு விட்டோம். சிலர் வாழைத்தார்களை பறவைகள், கால்நடைகளுக்கு இரையாக்கி  வருகின்றனர்.மழை, பனி போன்ற காரணங்களால் மக்கள் அதிக அளவு வாழைப்பழங்களை இப்போது சாப்பிடுவது இல்லை. இதுவும் விலை குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது.

ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் செலவிட்டு 900 வாழை கட்டைகளை பதியம் செய்வோம். பின்னர் 3 முறை பாத்தி வெட்டியும், கொத்தியும் வளர்ப்போம். வாழைத்தார்களின் விளைச்சல் அமோகமாக இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை. எனவே  வாழை விவசாயிகளை காப்பாற்ற நெற்பயிருக்கு இழப்பீடு வழங்குவதுபோல் வாழை சாகுபடிக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். வெங்காயம், முருங்கைக்காய், வரமிளகாய், உளுந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும்  தினமும் ஏறுமுகமாக உள்ள நிலையில் வாழைத்தார் விலை மட்டும் மலிவாக உள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலான செய்தி.

Tags : Comfort for people suffering from rising prices of onions and groceries; All types of bananas fall in price
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து...