×

ஜெயலலிதா இணைய தொடருக்கு எதிராக ஜெ.தீபா வழக்கு: இயக்குநர் கவுதம் வாசுதேவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பேசும் குயின் என்ற இணைய தொடருக்கு தடைகோரிய வழக்கில் இயக்குநர் கவுதம் வாசுதேவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும், இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரே நேரத்தில் தலைவி என்ற பெயரில் திரைப்படமும், குயின் என்ற பெயரில் வெப் தொடரும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குயின் வெப் தொடரை சனிக்கிழமை வெளியிடப்போவதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து இரண்டு ட்ரைலர்களையும் வெளியிட்டது. இவை இரண்டிற்கும் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள ஜெ.தீபா தமது மனுவில் தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதா எனது அத்தையாவார்.

அவரது சட்டப்படியான வாரிசு நான். என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா். ஆகவே குயின் வெப் தொடர் வெளியாகும் முன்பு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு இயக்குநர் கவுதம் வாசுதேவன் தரப்போ வழக்கு ஆவணங்கள் இன்னும் தரப்படவில்லை என்று முறையிட்டது. இதையடுத்து வழக்கு ஆவணங்களை இயக்குநருக்கு உடனடியாக கொடுக்குமாறு தீபா தரப்புக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கவுதம் வாசுதேவ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஜெ.தீபா மீதான விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.


Tags : JD Deepa ,Gautam Vasudeva High Court ,Gautam Vasudeva ,Jayalalithaa , Jayalalithaa, Web Series, J. Deepa, Director Gautam Vasudev, HC, Notices
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...