×

மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வயல் வழியே தூக்கிச் செல்லும் அவலம்: காரியாபட்டி அருகே கிராம மக்கள் குமுறல்

காரியாபட்டி:  காரியாபட்டி அருகே, பெத்தாரேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை வயல் வழியாக தூக்கிச் செல்லும் அவலம் நிலவுகிறது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, முஸ்டக்குறிச்சி ஊராட்சியில் பெத்தாரேந்தல் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊருக்கு சொந்தமான மயானம் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இந்த மயானத்திற்கு முறையான பாதை வசதி கிடையாது. இதனால், இறந்தவர்களின் உடல்களை வயல் வழியாகத் தூக்கிச் செல்கின்றனர்.
 நெல் பயிரிட்டுள்ள காலங்களில் சேற்றில் நடந்து செல்கின்றனர். மழை காலங்களில் இறந்தவர்களை தூக்கிச் செல்பவர்கள் கீழே விழுந்து அவதிப்படுகிறனர். எனவே, பெத்தாரேந்தல் கிராம மயானத்துக்கு பாதை அமைத்துக் கொடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:பழனிவேல்: மயானப் பாதை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிராமத்தை கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராம மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.செல்வி: 20 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்கள் எங்கள் ஊருக்கு வரவில்லை. குடிநீர், ரேஷன் கடை, பள்ளிக்கட்டிடம் எதுவும் இல்லை. மழை காலங்களில் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறுகின்றன. மர்மக் காய்ச்சல் பரவுகிறது. மயானத்துக்கு கூட பாதை இல்லாமல் அவதிப்படுகிறோம்.கருப்பாயி: ஊரில் வாறுகால் வசதியில்லை. மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்கிறது. நல்ல சாலை வசதியில்லை. உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சாலை போடுவதாக கூறி, தோண்டிப் போட்டு ஆறு மாதமாகிறது. எங்கள் கிராமம் தனித்தீவாக உள்ளது.

Tags : graveyard ,field , Lack,access, graveyard, Mortgage ,dead bodies,field
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...