×

2 ஆண்டுகளுக்குப்பின் நாங்குநேரி பெரிய குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

நாங்குநேரி: நெல்லை மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான நாங்குநேரி பெரிய குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாங்குநேரி பெரியகுளம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலான பாசன பரப்பு கொண்ட இந்த குளத்தின் மூலம் 25க்கு மேற்பட்ட கிராமங்கள் நேரடியாகவும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பிற குளங்களின் வழியாக மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன. நாங்குநேரியான் கால்வாய் மற்றும் மழைநீர் ஓடைகள் மூலமும் நீர் பெற்று வரும் இந்த குளம் இரண்டு ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாமல் இருந்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மேலும் இதன் கீழ் உள்ள வில்வராயர் குளம், நெடுங்குளம், பிள்ளைகுளம், ஆலடி புதுக்குளம், உன்னங்குளம், பராங்குசப்பேரி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் தண்ணீரின்றி கடந்த இரு ஆண்டாக வறண்டு கிடந்தன. தற்போது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து களக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல  குளங்கள் நிரம்பி விவசாய பணிகள் துவங்கி விட்ட நிலையில் நாங்குநேரி பெரியகுளம் நிரம்பாமல் இருந்து வந்தது.

இதனால் விவசாயிகள் விவசாயப்பணிகள் மேற்கொள்வதில் தயக்கம் காட்டினர். கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால் நாங்குநேரியான் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஒரு வார காலமாக கிடைத்த தண்ணீர் மூலம் நாங்குநேரி பெரியகுளம் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து இக்குளத்தில் ஐந்து கண் மதகு திறந்து விடப்பட்டுள்ளது அதன் மூலம் வில்வராயர் குளம் மற்றும் நெடுங்குளம் உள்பட பல்வேறு குளங்களுக்கு நீர் பகிர்மானம் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நாங்குநேரி பெரிய குளம் நிரம்பியதையடுத்து அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைகிடைத்து வருகிறது. நாங்குநேரி பெரியகுளம் நிரம்பியதை அடுத்து விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Nankuneri ,pond , After 2 years, Nankuneri ,large pond,farmers, happiness
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்