×

தமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதி தேர்வு நடத்துவதா?: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசு தற்போது இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் பணியாளர் பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சார்பில், பணியாளர் மற்றும் பயிற்சி நிறுவனம் 2 டிசம்பர் 2019ல் ஒரே பொதுத் தகுதித் தேர்வு நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி மத்திய அரசின் குரூப்-பி கெசட்டட் பணிகள், கெசட்டட் அல்லாத குரூப்-பி பணிகள் மற்றும் குரூப்-சி பணி இடங்களுக்கு ஒரே பொதுத் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்படும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு முகவாண்மை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது.மத்திய அரசு உருவாக்கும் முகவாண்மை நிறுவனத்துடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘செட்’ எழுதித் தேர்வு பெற்றவர்களைப் பெறலாம்.

இனி மாநில அரசுகள் தனியாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மத்திய அரசின் பொது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி; ஒரே குடும்ப அட்டை என்று நாட்டையே ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் பாஜ அரசு, மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.தமிழ்நாட்டில் வேலையற்ற 90 லட்சம் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜ அரசின் சதித் திட்டத்திற்கு அதிமுக அரசு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள ‘பொதுத் தகுதித் தேர்வு’ அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,government ,Vaiko condemns Center ,Vaiko , Tamil Nadu Government, Employees Appointment, General Eligibility, Vaiko condemns,central government
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...