×

அலட்சியத்தில் பொதுப்பணித்துறை: கழிவுகளால் மாசுபடும் மோகனூர் காவிரியாறு

* குப்பைகள் தேங்கி நோய் பரப்பும் அவலம்
* ஆர்வம் காட்டுமா பாதுகாப்பு இயக்கம்

நாமக்கல், டிச.7: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் முதல் ஒருவந்தூர் வரை சுமார் 40 கிமீ தூரம் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. பள்ளிபாளையத்தில் சாயப்பட்டறை கழிவுகள் முதல், மோகனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை நீர், கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுகள் வரை அனைத்தும் ஆண்டாண்டு காலமாக காவிரியில் தான் கலக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் உள்ளாட்சி அமைப்புகள் வேடிக்கை பார்த்து வருவது ஆண்டு, ஆண்டு காலமாக தொடரும் அவலநிலையாக இருக்கிறது. மோகனூரில் ஓடும் அகன்ற காவிரி  சுமார் 2 கிமீ பரப்பளவு கொண்டதாகும். காவிரியில் வெள்ளம் வரும் போது காவிரி கடல் போல காட்சி அளிக்கும். ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் காலங்களில் அகன்ற காவிரியின் அலங்கோலம் வெளியே தெரியும்.

பல ஆண்டாக தொடரும் மணல் கொள்ளையால் காவிரியின் அழகே மாறி போய்விட்டது. ஆங்காங்கே பாறைகளும், குழிகளும், குப்பை கழிவுகளும் தான் காட்சியாக தெரியும். குறிப்பாக மோகனூர் காவிரியில், ஒட்டுமொத்த பேரூராட்சி கழிவுகளும், கழிவுநீரும் கலந்து வருகிறது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்து சாக்கடை நீர் 24 மணி நேரமும் காவிரியில் கலந்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு கூட்டுகுடிநீர் திட்டத்துக்கு, கோயில் அருகாமையில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரியில் கலக்கப்படும் கழிவுநீர், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளிலும் புகுந்து விடுகிறது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதே தண்ணீரை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் நிரப்பி, உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் பல ஆண்டுகளாக காவிரியில் தான் கலக்கிறது.

ஈஸ்வரன் கோயிலை சுற்றியுள்ள காவிரி ஆற்றின் முகப்பில், ஆங்காங்கே குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. கோயிலுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்களை காவிரியில் வீசி விட்டு செல்கிறார்கள். மறைந்த முன்னோருக்கு திதி கொடுக்க ஈஸ்வரன் கோயில் ஆற்றுப்பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஆற்றில் படிக்கட்டுகள் கிடையாது. அரை கிலோ மீட்டர் தூரம் ஆற்றுக்குள் சென்றால் தான் குளிக்க முடியும். இதனால் ஆற்றின் முகப்பில் கழிவுகளும், குப்பை கூளங்களையும் தான் பார்க்க முடிகிறது. மோகனூர் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 15 வார்டுகள் இருக்கிறது. சின்னஞ்சிறிய ஊரான மோகனூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் விவசாயம் தொடர்ந்து செழிப்பாக நடைபெற்று வருவதற்கு மோகனூர் காவிரி ஆறு தான் காரணம்.

ஆனால் காவிரி ஆற்றை பேரூராட்சி நிர்வாகமும், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகமும் போட்டி,போட்டு கொண்டு மாசுபடுத்தி வருகிறது. மோகனூர் தாலுகா மக்களின் உயிர்நாடியாக திகழும் காவிரி ஆற்றை மாசுபடுத்தும் போக்கை நிரந்தரமாக தடுத்து நிறுத்த பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கூட்டுறவுத்துறை, பேரூராட்சி நிர்வாகம் என அனைத்து துறைகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி ஆறு மாசுபடுவதால், விவசாயம் மட்டும் இன்றி மோகனுர் பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் பாதிப்படைகிறது. மழை காலங்களில் ஆற்றில் இருந்து குடிநீர் திட்டத்துக்காக எடுக்கப்படும் தண்ணீரை மக்கள் அருந்த முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்ச மழைகாலங்களில் எதிரொலிக்கிறது. சிறிய ஊராக இருந்தாலும், காவிரியை மாசுபடுத்தும் செயல்கள் அதிகமாக நடப்பதால், மோகனூர் பேரூராட்சியில் கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமித்து, காவிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்து கொண்டால், எதிர்கால சந்ததியினருக்கு காவிரி தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலை எப்போது ஏற்படும் என்ற ஏக்கத்தில் மோகனுர் பகுதி மக்கள் இருக்கிறார்கள்.

கழிவுகள் கலப்பதை தடுக்க தனி திட்டம்
மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறியதாவது: மோகனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கிறது. இதில், 3 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தான் ஆற்றில் கலக்கிறது. அதுவும் மழை அதிகமாக பெய்யும் காலத்தில் தான் கழிவு நீர் காவிரிக்கு செல்கிறது. அதையும் தடுக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகமும், பேரூராட்சியும் இணைந்து, காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தனி திட்டத்தை, கலெக்டர் உத்தரவுப்படி அமைத்து வருகிறோம். அந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது காவிரியில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும். ஈஸ்வரன் கோயில் அருகில் சுகாதார பணிகள் தினமும் நடக்கிறது. அங்கு குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டக்கூடாது என மக்களை அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி முழுமையாக மாசடைகிறது
இயற்கை ஆர்வலரும், பத்திரபதிவு எழுத்தருமான சுகுமார் கூறுகையில், ‘ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும் காலங்களில் மட்டும், தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்துகிறது. அதன் பிறகு காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த காலங்களில் வறட்சி ஏற்பட்ட போது, மோகனூர் பேரூராட்சி பகுதியிலேயே குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. லாரிகள் மூலம் காசு கொடுத்து தண்ணீர் வினியோகம் செய்தோம். காவிரியை மாசுபடுத்தும் நடவடிக்கை ஒருபுறம் தொடர்கிறது. மறுபுறம் ஆற்றில் மணல் அதிகமாக அள்ளுவதால், ஆற்றின் போக்கு மாறி, ஆற்றில் தண்ணீர் தேங்குவதில்லை. இந்த பிரச்னைக்கு அரசுத்துறைகள் நிரந்தர தீர்வு காணவேண்டும். மோகனூர் காவிரியில் மட்டும் இன்றி, பள்ளிபாளையத்தில் இருந்து வரும் வழியோர கிராமங்களில் உள்ள அனைத்து கழிவுகளும் காவிரியில் கலப்பதால், மோகனூருக்கு தண்ணீர் வரும் போது, காவிரி முழுமையாக மாசடைகிறது,’ என்றார்.

அரசுத்துறைகள் மெத்தனம்
தமிழ்நாடு  விவசாயிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:  எருமப்பட்டி, மோகனூர் பேரூராட்சிக்கு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் எடுக்கும் இடத்தில் இருந்து, 30 மீட்டர் தெலைவில் தான் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடத்தில் தான் கழிவு நீர் கலக்கிறது. அத்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்தை கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என அறிவுறுத்தவில்லை. கழிவுநீர் கலப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. மக்களின் சுகாதாரத்துக்காக அதிக செலவு செய்யும் அரசாங்கம், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

காவிரி ஆற்றில் மோகனுர் பேரூராட்சியின் கழிவுகள் கலப்பதை தடுக்கவேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி என்பது தற்போது கழிவுநீர் கலக்கும் இடமாக மாறி விட்டது. ஆற்றின் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதால், ஆற்றில் தூய்மையான தண்ணீர் கிடைக்கும் நிலையும் மாறி விட்டது. எனவே, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையத்தை மோகனூர் பேரூராட்சியில் அமைக்கவேண்டும். ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பதில் பொதுப்பணித்துறை,  பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் மெத்தனமாக செயல்படுகிறது. இவ்வாறு பாலப்பிரணியம் தெரிவித்தார்.

Tags : Public Works Department in Negligence ,Mohanur Kavriyaru Mohanur , Public Works Waste, Pollution, Mohanur Kaviyaru
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...