×

அடிக்கடி மூடப்படும் நியூ டவுன் ரயில்வே கேட் தினமும் பரிதவிப்புக்கு ஆளாகும் வாணியம்பாடி மக்கள்

* நகருக்குள் வர மறுக்கும் அரசு, தனியார் பஸ்கள்
* மேம்பாலம் கட்ட கோரிக்கை

வாணியம்பாடி: அடிக்கடி மூடப்படும் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட்டால் நகருக்குள் அரசு, தனியார் பஸ்கள் வர மறுத்து மாற்றுப்பாதையில் செல்கின்றன. இதனால் தினமும் பரிதவிப்புக்கு ஆளாகும் வாணியம்பாடி நகர மக்களின்
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய புராணத்தில் இடம்பெற்ற கல்வி கடவுளான கலைவாணியான சரஸ்வதியை பேச வைத்த தலம் என்பதால் வாணியம்பாடி என்ற சிறப்பை பெற்ற வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புப்பெற்ற வாணியம்பாடி நகரம் மக்களின் உயிர் நாடியாக விளங்கி, தேன்சுவையாய் ஓடிய பாலாறு தன் அடையாளத்தை தொலைத்ததை போல, இந்நகரம் தன் பெருமைகளை ஒவ்வொன்றாக தொலைக்க தொடங்கி உள்ளது. இதில் முக்கியமாக நகர மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வாணியம்பாடியில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதைவிட அதிகமாக இந்நகரில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரம். இங்கு வாழும் மக்களில், மூன்றில் ஒருபங்கினர் வாணியம்பாடி புதுநகர் எனப்படும் நியூடவுன் பகுதியில், நூறு ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருமே வாணியம்பாடிக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இவர்களை நிரந்தரமாக பிரித்து வைத்துள்ளது தென்னக ரயில்வேயின் கேட். நியூடவுனை இணைக்கவும், பிரிக்கவும் அமைக்கப்பட்ட இந்த கேட் எல்.சி. 81 என அடையாளமிடப்பட்டு இயங்கி வந்தது. இதன் வழியாக ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. அப்போதெல்லாம் ரயில்வே கேட்டை மூடி திறக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட தடவைகள் மூடப்படும் ரயில்வே கேட்டால் மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவர்களின் இன்னல்களை சமூக அமைப்புகளும், அரசியல்வாதிகளும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், இங்கு சுரங்க பாதை அமைக்க ₹18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அப்பணிகளை தொடங்குவதற்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியது தென்னக ரயில்வே நிர்வாகம். ஆனால் இதுவரை எந்தவித பணியும் உருப்படியாக நடக்கவில்லை. பெயரளவுக்கு பூமி பூஜை போடுவதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கிறார் ஒப்பந்ததாரர் என்கின்றனர் நகர மக்கள்.

இதன் காரணமாக கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தங்கும் விடுதிகள், திருமணக் கூடங்கள், வங்கிகள், நகராட்சி அலுவலகம், கோட்டப் பொறியாளர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், நீர்வள ஆதார அமைப்பு அலுவலகம், பயணியர் மாளிகை, தோட்டக்கலைத்துறை அலுவலகம், கரும்பு அலுவலகம், உணவு தானிய கிடங்கு என இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று வரும் மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டியப்பனூர் ரவுண்டானாவுக்கு சென்று, அதன் பின்னர் தெற்கு நோக்கி பயணித்து, உரிய அலுவலகங்களை அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும், நியூ டவுன், தர்ஜிப்பேட்டை, கோவிந்தாபுரம், நேதாஜி நகர், மில்லத் நகர், பாரத் நகர், இந்திரா நகர், கணவாய்புதூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என பல தரப்பினரும் வாணியம்பாடி வர வேண்டும் என்றால், பெருமாள்பேட்டை கூட்டுரோடு வழியாக சென்று, சி.என்.அண்ணா சாலை வழியாக, பஸ் நிலையம் அடைந்து, அதன் பின்னர் தங்களின் அன்றாட பணிகளை பார்க்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதன் காரணமாக நேர விரயமும், எரிபொருள் விரயமும், பண விரயமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல மேலே சொன்ன வழிகளாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவற்றையெல்லாம் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை எடுத்துச்சொல்லியும், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தற்போது, எங்களுக்கு புதிய சுரங்கப்பாதையே வேண்டாம். மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறந்து விட்டாலே போதும். நாங்கள் பழைய நிலையிலேயே கூட வாழ்ந்து விடுகிறோம் என்ற விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டனர். அதற்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடிய நியூடவுன் ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் திறந்துவிட்டது.

மேலும் 10 அடிக்கும் உயரம் குறைவான வாகனங்கள் மட்டுமே சென்று வரும் வகையில் தனது உயரத்தை குறைத்த காரணத்தால், இந்த வழியாக பஸ், லாரி, மினி வேன் போன்ற கனரக வாகனங்கள் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. புதூர் மேம்பாலம் வழியாக சென்று நியூடவுனுக்கு செல்லவேண்டிய வழிமட்டுமே உள்ளது. இதன் காரணமாக நேர விரயம், எரிபொருள் விரயம் போன்றவை தவிர்க்க முடியாததாகி வருகிறது. இந்த வாகனங்கள் சென்று வரக்கூடிய வகையில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதற்கு தேவையான நிலங்களை தனியாரிடம் இருந்து ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் தேவையான இடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி நிலஉரிமையாளர்களுக்கு தரப்படவேண்டிய இழப்பீட்டுத்தொகையினை கணக்கீடு செய்யாமலும் அதனை வழங்காமலும் நீண்ட காலம் அலைக்கழித்து வருகின்றனர்.அதோடு சுரங்கப்பாதைக்காக ஒதுக்கப்பட்டநிதி தற்போது எங்கே ஒதுங்கிப்போய் உள்ளது என்பதும் தெரியவில்லை என்கின்றனர் வாணியம்பாடி மக்கள். அதேநேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்ட மதிப்பீடு தற்போது மேலும் அதிகரிக்கும் என்ற நிலையில் அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தனை சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பிறகே வாணியம்பாடி நியூடவுனுக்கு, சுரங்கப்பாதை அமைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, இனியாவது ரயில்வே சுரங்கப் பாதைக்கான தடைகள் உடைய வேண்டும். அல்லது அதனை புதிய மேம்பாலம் அமைப்பதற்கான திட்டமாகவும் மாற்றி நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ஆக்கிரமிப்புகள் திடீர் அகற்றம்:
வாணியம்பாடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க இடையூறாக இருந்த 27 வீடுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நேற்று அகற்றும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

* சேகர்,ரயில் நிலைய மேலாளர், வாணியம்பாடி:
வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் பிரச்னை குறித்து வாணியம்பாடி ரயில் நிலைய மேலாளர் சேகரிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே சுரங்க பாதை கட்ட, பொது டெண்டர் விடப்பட்டிருந்தது. இடையில் அது ரத்தாகி விட்டது. மீண்டும் டெண்டர் விட அறிவிப்பு ஏதும் வந்ததாக தெரியவில்லை. வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் வாணியம்பாடி வருகை தருகிறார். மேலும் சுரங்கப்பாதை குறித்த தகவல்கள் எதுவாக இருந்தாலும் அதுகுறித்து மேலதிகாரிகளிடம் மட்டுமே தகவல் பெற வேண்டியிருக்கும்’ என்றார்.

* சுசில்தாமஸ், ஆணையாளர், வாணியம்பாடி நகராட்சி:
நான் புதிதாக வந்துள்ளதால் தற்போது தகவல் கூற இயலவில்லை. உரிய அதிகாரிகளிடம் தகவல் பெற்று பின்னர் கூறுகிறேன்.

* சையத் நிசார் அகமத், தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், வாணியம்பாடி:
இந்த சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக அமைப்பின் சார்பில் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டிவருவது உகந்ததாக இல்லை.


Tags : shutdown ,closure ,New Town Railway Gate , Often closed, the Newtown Railway Gate, the picnic, the people of the city
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...