×

கோமியத்தை ‘மிக்ஸிங்’ செய்து மாட்டுச்சாணத்தில் உருவாகிறது மனம் கவரும் கலைப்பொருட்கள்: மதுரை இயற்கை விவசாயி அசத்தல்

மதுரை: மதுரையைச் சேர்ந்த இயற்கை விவசாயி, மாட்டுச்சாணம், கோமியம் கொண்டு வித விதமான கலைப்படைப்புகளை செய்து அசத்தி வருகிறார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் கணேசன் (49). மனைவி சரஸ்வதி. 2 மகன்கள் உள்ளனர். பிள்ளைகளின் படிப்பிற்காக தற்போது மதுரை, செல்லூரில் வசித்து வரும் கணேசன், இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்து அபுதாபியில் பணியாற்றி வந்தார். இயற்கை விவசாயத்தின் மீது இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு விட்டு, சொந்த ஊரான பெருங்காமநல்லூரில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் முழுநேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். மாடுகளின் சாணம், கோமியம் கொண்டு நூற்றுக்கணக்கான கலைப்படைப்புளை செய்து அசத்தி வருகிறார்.

வீட்டு முகப்பில் தொங்கும் மாவிலை தோரண வடிவம் துவங்கி, விதவிதமான விநாயகர் உருவங்கள், செல்போன் ஸ்டாண்ட், பூஜை பொருட்கள், பொம்மைகள் என இவர் தயாரிப்புகள் அனைத்தும் வியப்பூட்டுகின்றன. ரசாயன கலவை, செயற்கை வண்ணங்களின்றி இவை மிளிர்கின்றன. முழுவதும் கைகளாலேயே செய்யப்படும் இவை ரூ.5ல் துவங்கி ரூ.1,200 வரை விலை போகின்றன. இதுகுறித்து கணேசன் கூறியதாவது: சாணம், கோமியம் கொண்டு கலைப்பொருட்களை செய்ய முடிவெடுத்தேன். விபூதி, பல்பொடி, பாத்திரம் துலக்கும் பொடி இதைக் கடந்து கலைப்பொருள் படைக்கும் சிந்தனை வந்தது. நாட்டுப்பசு மாட்டின் சாணி நல்ல கிருமிநாசினி. கோமியம் மருத்துவ குணமிக்கது. இரண்டையும் கொண்டு படைத்த கலைப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் வளர்க்கும் ஒரு புலிக்குளம் பசுமாட்டின் சாணத்திலேயே ஏராளமான பொருட்களை படைக்கிறேன்.

ஒரு நாட்டு மாடுகளுக்கு வைக்கோல், பச்சைப்புல், அரிசி கழுவிய தண்ணீர், பச்சைத்தண்ணீர் மட்டுமே தருகிறேன். தவிடு, புண்ணாக்கு, கஞ்சி உள்ளிட்ட வேகவைத்த எந்த மாற்றுப்பொருளும் மாட்டிற்கு தரக்கூடாது. இயற்கையாக மேய விடுவதுடன், தினமும் 4 மணிநேரம் வெயிலில் இருக்க விடுவதும் நல்லது. இந்த மாடு கன்று போட்டு, பால் கறக்கும் காலத்தில் கிடைக்கும் சாணத்தில் இறை உருவங்கள் மட்டுமே செய்கிறேன். 80 சதவீதம் சாணம் உரத்திற்குப்போக, மீதி 20 சதவீதமே கலைப்படைப்புகளாகிறது. மனைவியும் உதவி புரிகிறார். கோமியத்தை தொட்டு, சாணத்தில் கலைப்படைப்பினை செய்து, நல்ல வெயிலில் முழுமையாக காய வைக்க வேண்டும். ஒரு கிலோ பொருட்களை காயவைத்தால், 270 கிராம் பொருட்களே கிடைக்கும். பொருளின் நீர்ச்சத்துகள் ஆவியாகிவிடும்.

லேசான ஈரமிருந்தாலும் பூச்சி வந்து விடும். காய்ந்ததை எடுத்து, மேற்புறத்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து, சாணம், கோமியம் கலந்த சாணப்பாலில் முக்கி எடுத்து மீண்டும் நன்கு காயவைக்க அற்புதமான கலைப்படைப்பு கிடைத்து விடும்.
கைகளில்தான் செய்கிறேன். அச்சு, மோல்டு எதுவும் பயன்படுத்துவதில்லை. கையாலேயே பெயர்ப்பலகை கூட செய்யலாம். அதிக ஈரம் படாமல் பாதுகாத்தால், பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்தலாம். மறுசுழற்சிக்கும் பயன்படும். ஒருநாள் ஊற வைத்து, மாடித்தோட்டத்திற்கும் உரமாக்கலாம். இந்த கலைப்படைப்பாக்கத்தை விற்பனையாக்கினாலும், லாப எதிர்பார்ப்பின்றி, இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற பிரசாரமாகவே தொடர்கிறேன்.
இவ்வாறு கூறினார். இயற்கை விவசாயம் மற்றும் சாணத்திலான கலைப்படைப்புகளை பாராட்டி, இவருக்கு பல்வேறு விருதுகள், சான்றுகளும் கிடைத்துள்ளன.

Tags : Mathurai Natural Farmer , Artifacts, Madurai natural farmer
× RELATED தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3...