×

நாடாளுமன்றத்தில் நிறைவேற காத்திருக்கும் அணை பாதுகாப்பு சட்டம்: பெரியாறு அணைக்கு கிடைக்குமா விதிவிலக்கு?

* தண்ணீர் திறக்கும் அதிகாரம் பறிபோகும் அபாயம்
* பல்லாயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு சிக்கல்
* அழுத்தம் தந்து உரிமை காக்குமா தமிழக அரசு?

மதுரை: நாடாளுமன்றத்தில் நிறைவேற காத்திருக்கும் அணை பாதுகாப்பு சட்டத்தில் பெரியாறு அணை உள்ளிட்ட 4 அணைகளுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து விதிவிலக்கு வாங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தவறினால் அணையில் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட அதிகாரங்கள், தமிழகத்திடமிருந்து பறிபோகும். மேலும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும் பாதிப்படையுமென விவசாயிகள் அஞ்சுகின்றனர். நாடு முழுவதும் அமலாக்கும் வகையில், அணை பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்து அமைச்சரவை ஒப்புதலும் பெற்று எந்த நேரமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காத்திருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இம்மசோதா கடைசி நேரத்தில் நிறைவேற்றப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

இதுகுறித்த விவரம் வருமாறு: மத்திய அரசு முதன்முதலில் அணை பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவை 1987ல் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், முடக்கி போட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்து, மாநிலங்களின் விருப்ப உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அப்போதும் நிறைவேறவில்லை. அதில் தலைகீழ் மாற்றம் செய்து, 2018ல் தயாரிக்கப்பட்ட மசோதாவில் மாநில விருப்புரிமை இடம்பெறவில்லை. தற்போது இதே மசோதாவை மீண்டும் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதில் நாடு முழுவதுமுள்ள 5,200 பெரிய அணைகள், 450 புதிய அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 116 அணைகளில் 84 அணைகள் இடம் பெறுகின்றன. புதிய சட்ட மசோதா நிறைவேறினால், அணை பாதுகாப்பு தேசிய கமிட்டியும், ஆணையமும் உருவாக்கப்படும்.

இந்த இரு அமைப்பும் மாநில அரசு அமைக்கும் அணை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியது. ஏனென்றால் புதிய மசோதாவிலுள்ள ஷரத்துகளின்படி, ‘அந்தந்த மாநில எல்லைக்குள் அமைந்துள்ள அணைகளின் நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்’ என்பதில்தான் சிக்கல் எழுகிறது. அதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான பெரியாறு அணை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் நீராதாரமான பரம்பிகுளம் ஆழியாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய 3 அணைகளின் உரிமை கேரளாவுக்கு சென்று விடும். ஏனென்றால், தமிழகத்திற்கு சொந்தமான இந்த அணைகள் கேரள எல்லைக்குள் அமைந்துள்ளன.

அணைகளின் பராமரிப்பு, தண்ணீர் திறப்பு அதிகாரம் முழுவதும் தமிழக அரசிடம் இருந்து பறிக்கப்பட்டு, கேரளத்திற்கு தாரைவார்த்தது போல் ஆகிவிடும் என்ற அச்சம் விவசாயிகளிடையே ஆட்டி படைக்கிறது. இதுகுறித்து மூத்த பொறியாளர், பாசன விவசாயிகள் கூறியதாவது: பெரியாறு அணையின் 152 அடி உயரத்தில், 104 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகத்திற்கு திறந்து கொள்ளலாம் என்பது 999 ஆண்டு ஒப்பந்தமாகும். கேரளா கிளப்பிய பிரச்னையால் 35 ஆண்டுகள் 136 அடி மட்டுமே தேக்க முடிந்தது. 2014ல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 142 அடி தேக்க முடிகிறது. இந்தத் தண்ணீர் தமிழகத்திற்கு 1.5 கிமீ. நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக திறக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகபட்சம் வினாடிக்கு 2,100 கன அடி வீதம் மட்டுமே திறக்க முடியும். அணையில் தேக்கப்படும் தண்ணீரை எப்போது, எவ்வளவு திறக்கலாம் என்பது உள்ளிட்ட அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. அதன் உபரி நீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

எனவே பெரியாறு அணையை மழைக்காலங்களில் முன்கூட்டியே திறந்தால் வைகை அணையில் தண்ணீர் நிரம்பி, மூலவைகையில் இருந்து வரும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே தான் பெரியாறு அணையில் 142 அடி வரை நிரப்பப்படுகிறது. இதற்கான முடிவுகளை தமிழக அரசு எடுக்கும். இந்த சூழலில் புதிய சட்டம் நிறைவேறினால், அணை பராமரிப்பு மற்றும் தண்ணீரை திறக்கும் அதிகாரங்கள் தமிழக அரசிடம் இருந்து கேரளாவுக்கு பறி போகும் அபாயம் உள்ளது. அந்த அதிகாரத்தை மத்திய அரசு ஆணையம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமா அல்லது அணை எந்த மாநிலத்தில் இருக்கிறதோ அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவிடுமா என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே பெரியாறு அணை பராமரிப்பு, தண்ணீர் திறப்பு அதிகாரம் தமிழகத்திடம் இருந்து பறிபோய்விடும் என்று அஞ்ச வேண்டி உள்ளது.

ஏற்கனவே 2007ல் கேரள சட்டப்பேரவையில் அந்த மாநில அரசு நிறைவேற்றிய அணை பாதுகாப்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் சட்டம் நிறைவேறினால் அது கேரளத்துக்கு சாதகமாகி, தமிழகத்திற்கு பாதகமாகிவிடும். காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்திடம் மன்றாடுவது போல், பெரியாறு அணையில் தண்ணீரை திறக்க கேரளாவுடன் மன்றாடும் சூழல் ஏற்படும். தமிழகத்திற்கான தண்ணீரை தருகிறோம் என்று சொல்லி 142 அடி வரை தேக்கவிடாமல், 136 அடிக்கு மேல் பெருகும் தண்ணீரை கேரளா திறக்க ஆரம்பித்தால் யார் தடுப்பது? இவ்வாறு தெரிவித்தனர். இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என 2018ல் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஓராண்டுக்கு பிறகு மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, மசோதாவில் பெரியாறு அணை உள்ளிட்ட 4 அணைகளுக்கும் விதிவிலக்கு வாங்குமா? தவறினால் அணை அதிகாரங்களை பறி கொடுத்து, தண்ணீரை திறக்க மத்திய அரசிடமும், கேரளத்திடமும் கெஞ்சும் நிலைக்கு ஆளாகப்போகிறதா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இஷ்டம் போல திறந்தால் கஷ்டம் தமிழகத்துக்குத்தான்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 68 அடியை தாண்டி உள்ளது. முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால், அணை விரைவில் திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பெரியாறு அணையில் 128.80 அடி உள்ளது. இந்த அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படாத சூழலிலேயே, நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையை வைத்தே, வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் புதிய சட்டத்தின்படி தண்ணீர் திறக்கும் அதிகாரம் கேரளா கைக்கு மாறினால், அங்கிருந்து இஷ்டத்துக்கு தண்ணீரை திறந்து, வைகை அணையிலும் தேக்க முடியாமல் வீணாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அணைகளில் கொள்ளளவு குறைவு
மாநிலவாரியாக அணைகளின் எண்ணிக்கை வருமாறு: மகாராஷ்டிரா- 1,693, ம.பி. - 898, குஜராத் - 619, ஆந்திரா, தெலங்கானா- 304, கர்நாடகா- 230, தமிழ்நாடு- 116, கேரளா- 61. தமிழக அணைகளில் நீர் கொள்ளளவு குறைவாக தான் உள்ளது. தமிழக அணைகள் முழுவதும் தேக்கப்படும் நீரின் மொத்த அளவை விட கர்நாடகா மற்றும் ஆந்திரா தெலங்கானாவிலுள்ள 5 பெரிய அணைகளில் தேக்கப்படும் அளவு அதிகமுள்ளது. அதிலும் தமிழக முக்கிய அணைகள் அண்டை மாநிலங்களையே நம்பி உள்ளன.

Tags : dam , Dam Safety Act, Periyar Dam
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...