×

கொட்டி தீர்த்த மழையிலும் பாதி கூட நிரம்பாத பெரிய கண்மாய்

*கால்வாய் தூர்வார வேண்டும்
* வீணாக செல்லும் தண்ணீர்

ஆர்.எஸ்.மங்கலம்  : கனமழையிலும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் நிரம்பாமல் உள்ளது. பலமுறை வரத்து கால்வாய்களை தூர்வார கோரியும் அரசு செய்யாததால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயாகும். இந்த கண்மாய் சுமார் 20 கி.மீ தூரமுள்ளது. இந்த கண்மாய்க்கு நாரை பறக்கா 48 உரிகளை கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கண்மாயில் விவசாயிகளின் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஒரு மடை வீதம் 20 மடைகள் அமையப் பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க அடி தண்ணீரை தேக்கக் கூடிய கொள்ளளவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டதும் ஆகும்.

இத்தனை சிறப்புமிக்க இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் கருவேல மரங்களும் ,முட்புதர்களும் மண்டி கிடக்கிறது. இந்த ஆண்டு இவ்வளவு மழை பெய்தும் இன்னும் கண்மாய் நிரம்பவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த கண்மாயை தூர்வாரி தரக்கோரி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பல முறை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக விட்டு விட்டனர். இதன் விளைவாக இவ்வளவு கன மழை பெய்தும் பாதி கண்மாய் கூட நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, பிச்சனா கோட்டை, ரெகுநாத மடை, நெடும் புளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுக வயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்ல மடை, வல்லமடை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமின்றி அருகேயுள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட மற்றும் பல கிராமங்களும் பசன வசதி பெறும் நிலையில் இப்படி நிரம்பாமல் உள்ளது.

இந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் வைகை தண்ணீர் வரும் விதமாக அமையப் பெற்றுள்ள, கீழ நாட்டார் கால்வாயை முறையாக தூர் வாராத காரணத்தாலும், சூரியான் கோட்டை ஆற்று கால்வாய் சரியாக தூர் வாராமல் விட்டதாலும் இவ்வளவு கண மழை பெய்தும் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் சரியான மழை பெய்யாத காரணத்தாலும் கண்மாய் மட்டுமின்றி குளம், குட்டைகளிலும் தண்ணீரும் இல்மல் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து பொதுமக்கள் கடந்த சில மதங்களுக்கு முன்பு வரை ஒரு குடம் தண்ணீர் ரூ.5 முதல் 10 வரை வாங்கி பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது குறிப்பிடதக்கது.

தற்போது இந்த கண்மாயின் மொத்த கொள்ளளவில் சுமார் 45 சதவீதம் தான் நீர் நிரம்பியுள்ளது. இன்னும் சுமார் 55 சதவீதம் நீர் நிரம்ப வேண்டியுள்ளது. அவ்வாறு முழு கொள்ளளவும் நீர் நிறைந்தால் இப்பகுதி விவசாயிகள் இரண்டு போகம் விவசாயம் செய்வார்கள். அதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இனிமேலாவது தண்ணீர் வற்றிய பிறகாவது வரும் காலங்களில் இந்த கண்மாயை தூர்வாரி அடுத்து வரும்மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் விதமாக பெரிய கண்மாய் மற்றும் அதற்குறிய வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுத்து இந்த கண்மாயை தூர்வாரி விவசாயிகளின் துயரை துடைக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : downpour ,RS Mangalam Big Water Storage Area , rain, RS Mangalam,Big Water Storage,Ramnad District
× RELATED அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்