3 கட்சி ஆட்சி நீடிக்காது: பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கவே விரும்புவதாக அஜித்பவார் தெரிவித்தார்...தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் அவராகவே வந்து எங்களை அணுகி பாஜக தலைமையிலான ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததாக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்த நிலையில், கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியால் ஆட்சியமைக்க இயலாமல் போனது.

இதனிடையே. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது. மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத  விதமாக கடந்த மாதம் 23ம் தேதி காலையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் முதல்வர் மற்றும் துணை முதல்வராக  பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பின்னர் சரத்பவாரின் ஆதரவு இல்லாததால் அஜித்பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸும் முதல்வர் பதவியிலிருந்து கடந்த நவம்பர் 26-ம் தேதி விலகினார். இதனையடுத்து தேசியவாத  காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராத்திய செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், சரத் பவாருடன் இணைந்து ஆட்சியமைத்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அஜித் பவார்  அவராகவே என்னை அணுகி காங்கிரஸுடன் செல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை, மூன்று கட்சி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. நாங்கள் பாஜகவுடன் இணைந்து நிலையான ஆட்சியமைக்கவே விரும்புகிறோம் என்று அஜித்  பவார் தன்னிடம் தெரிவித்ததாக ஃபட்னாவிஸ் கூறினார்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் தான் பேசிவிட்டதாக அப்போது அஜித்பவார் தன்னிடம் தெரிவித்ததாகவும், சில எம்.எல்.ஏக்களையும் என்னிடம் பேச வைத்ததாகவும், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 54  எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் வழங்குவதாக எனக்கு அஜித்பவார் உறுதியளித்தார் என்று ஃபட்னாவிஸ் கூறினார். இருப்பினும்,  தேசியவாத காங்கிரஸூடனான அந்த முடிவு பாதகமாக மாறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். திரைமறைவுக்கு  பின்னாள் நடந்தவற்றை தற்போது என்னால் கூற இயலாது என்றும், விரைவில் இது தொடர்பாக நான் பேசுவேன் என்றும் ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவரும் பேட்டி ஒன்றில், அஜித்பவார் பட்னாவிசை சந்தித்தது தமக்கு தெரியும் எனவும், ஆனால் ஆட்சியமைக்க முடிவு செய்தது குறித்து எதுவும் தெரியாது என கூறியிருந்தார் என்பது

குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>