தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை; மீறினால் சட்டப்படி நடவடிக்கை...ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை

சென்னை: உச்சநீதிமன்றம் அறிவுரையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும்  30ம் தேதி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2ம் தேதி  மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு சரியாக  பின்பற்றப்படவில்லை. 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் அறிவிப்பு முறைகேடாக உள்ளது என்று திமுக  சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 9  மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடுகளை  சரியாக பின்பற்றி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும்,  ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக வழங்கிய அறிவிப்பாணையை ரத்து செய்தும் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், 9 மாவட்டங்களை  தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27  மற்றும் 30 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வேட்புமனு தாக்கல் 9ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் துவங்கும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் வருகிற  16ம் தேதி ஆகும். 17ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 19ம் தேதி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதியும் 2ம்  கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி  தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக தலைமையில் பாமக, பாஜ, தேமுதிக, தமாக, சமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி  அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை:

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ,  மன்றத்தின் கோடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Supporters ,Elections ,Rajini ,Tamil Nadu Rural Local Authorities ,People's Forum Report Tamil Nadu Rural Local Authorities for Elections , Elections for Tamil Nadu Rural Local Authorities: No Supporters; Rajini to take legal action if violated
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது