×

தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா?: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதை, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் பாராட்டினர். மேலும், பாவ் நகர் மாவட்டம், மகுவா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில், ஐதராபாத்தில் என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு ₹1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அதிரடியாக அறிவித்தார். இதில் என்கவுன்டர் செய்த போலீசாருக்கு நாட்டின் அனைத்து மாநில மக்களின் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றதில், நீதிமன்றத்தின் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. இதில், மனித உரிமை என்பது முற்றிலும் மீறப்பட்டுள்ளது. அதனால், இதில் நீதிமன்றம் தலையிட்டு விதிகள் மீறப்பட்டு இருப்பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவரும் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Tags : Telangana Encounter ,persons ,Telangana ,Supreme Court ,Encounter Affair , Telangana, Encounter Affair, Supreme Court, Case
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி