×

அகில இந்திய அளவில் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 4வது இடம்

தேனி: நாட்டின் சிறந்த 10 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் தரவரிசை பட்டியலில், தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 4வது இடமும், மாநில அளவில் முதலிடமும் கிடைத்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாட்டினை கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் தயார் செய்தது. இதில் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அகில இந்திய அளவில் 4வது இடமும், மாநில அளவில் முதலிடமும் கிடைத்துள்ளது.
 இதுகுறித்து தேனி எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி கூறியதாவது:

நாடு முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்க வருபவர்களை நடத்தும் விதம், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, மனுதாரர்களை அழைத்து விசாரிப்பது, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, மகளிருக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான முறையில் செயல்படுவது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விஷயங்கள் குறித்து கடந்த 4 மாதங்களாக ஆய்வுப்பணிகள் நாடு முழுவதும் நடந்தன. டெல்லியில் இருந்து வந்த ஆய்வுக்குழு, கல்லூரி மாணவர்களின் உதவியுடன் வெளியிடங்களிலும், பொதுமக்களிடமும், புகார் கொடுத்தவர்களிடமும், நீதி பெற்றவர்களிடமும் கருத்து கேட்டனர்.

அத்துடன் காவல்நிலைய பைல்களையும் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு நிகழ்வு மற்றும் விசாரணைக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில் கொடுக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அகில இந்திய அளவில் 4ம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இப்போது கிடைத்துள்ள சிறப்பிடம் தேனி மாவட்ட போலீசார் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Theni Women's Police Station ,India , Theni Women Police, Station, 4th place in All India level
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...