×

நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பார்சலில் வெங்காயம்: பெரம்பலூர் காங்கிரசார் பதிவு தபாலில் அனுப்பினர்

பெரம்பலூர்: நான் வெங்காயம் சாப்பிட்டதில்லை. எனவே அதன் விலையும் எனக்கு தெரியாது என கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமர் மோடிக்கும் பதிவு தபால் மூலம் பெரம்பலூர் காங்கிரசார் வெங்காயம்
அனுப்பி வைத்துள்ளனர். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாத்திற்கு மேலாக கிலோ ₹100க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ₹200 ஆக உயர்ந்து விட்டது. ஜனவரி வரை வெங்காயத்தின் விலை குறையாது என்றும் வியாபாரிகள் கூறி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்திலும் பிரச்னை எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ எங்கள் வீட்டில் வெங்காயம், பூண்டு சாப்பிட்டதில்லை, எனவே வெங்காயத்தின் விலை பற்றி, அதன் நிலை பற்றி எனக்கு தெரியாது’’ என கூறினார். இதற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், நேற்று பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் கட்சியினர், நாட்டில் வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடிக்கும், வெங்காயத்தை நான் சாப்பிட்டதில்லை என வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து ஏளனமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வெங்காயத்தை பெரம்பலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஒவ்வொரு பார்சலிலும் அரை கிலோ சின்ன வெங்காயம் இருந்தது. எனவே, இதற்காக ₹350க்கு அஞ்சல் தலை ஒட்டப்பட்டது. அந்த வெங்காய பார்சலுடன் இருவருக்கும் அனுப்பிய கடிதத்தில், ‘‘வெங்காயத்தை இதுவரை சாப்பிடாத நீங்கள் வெங்காயத்தை முதலில் சாப்பிட்டு பார்த்து விட்டு நாட்டின் நிலையை அறிந்து மக்கள்மீது அக்கறை கொண்டு வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.

Tags : Modi ,Perambalur Congressional Record ,Nirmala Sitharaman ,Perambalur Congress , Nirmala Sitharaman, PM Modi, Parcel, Onion, Perambalur Congress, Registration, Postage
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...