×

4 வழிச்சாலையில் விபத்து அபாயம்: ஆவியூரில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, நான்குவழிச்சாலையில் உள்ள ஆவியூரில் சர்வீஸ் சாலை இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே, மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆவியூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சுற்றி அரசகுளம், குரண்டி, மாங்குளம், கீழ உப்பிலிக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை நகரங்களுக்கு செல்ல, ஆவியூருக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஊரில் உள்ள காவல்நிலையம் வடபுறத்தில் உள்ளதால், அங்கு செல்வோர் எதிரெதிர் திசையில் சென்று விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், மதுரை செல்லும் பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன. சில சமயங்களில் வேகமாக பின்னால் வரும் வாகனங்கள் இடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்தை சீரமைக்க பேரிகார்டுகள் வைத்துள்ளனர். இருப்பினும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.

நான்குவழிச்சாலையில், சர்வீஸ் ரோடு இல்லாததால், முக்கிய இடங்களின் குறுக்கே போலீசார் பேரிகார்டுகளை வைத்துள்ளனர். சில நேரங்களில் பேரிகார்டுகளும் விபத்துகளுக்கு காரணமாகின்றன. பேரிகார்டுகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள் பேரிகார்டுகளில் மோதி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, நான்குவழிச்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் ஆவியூர் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். விபத்து ஏற்படும் வகையில் உள்ள பேரிகார்டுகளை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Avur ,lane ,Service road ,motorists , 4 way road, accident, service road, motorists
× RELATED பொம்மை விமானத்தை தலையில் கட்டி வந்து சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்