வருகிற 10ம் தேதி நடைபெற உள்ள பரணி தீபம், மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைனில் இன்று முதல் டிக்கெட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், வரும் 10ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் நடைபெறுகிறது.இதையொட்டி, இன்று காலை 10 மணிக்கு www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் பரணி தீப தரிசனத்திற்கு 500 கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், மகா தீபதரிசனத்திற்கு ₹600 கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும், 500 கட்டணத்தில் 1,000 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டண சீட்டுகளை ஆன்லைனில் பெற விரும்புபவர்களுக்கு, ஆதார் எண், செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அவசியம் தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) செல்போனுக்கு வரும். அவ்வாறு டிக்கெட் பெற்று பரணி தீபம் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், 10ம் தேதி அதிகாலை 2 மணிக்கு முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 10ம் தேதி பிற்பகல் 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். தங்கம், வெள்ளி நாணயம் பரிசு: கார்த்திகை மகா தீப திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை  கொண்டு வரும் பக்தர்களில் குலுக்கல் முறையில் 12 பேருக்கு 2 கிராம் தங்க நாணயங்களும், 72 பேருக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களும்  பரிசு வழங்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட உள்ளது.

Related Stories: