×

மேற்கு வங்கத்தில் அவமதிப்புக்குப்பின் சட்டபேரவைக்கு சென்றார் ஆளுநர்

கொல்கத்தா: சட்டப்பேரவைக்குள் நுழைய விடாமல் அவமதிப்பு செய்யப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார், நேற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு சுமூகமாக சென்றார். முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அவர் அறிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராக ஜகதீப் தங்கார் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது முதல் ஆளுநர், முதல்வர் இடையே பல விஷயங்களில் மோதல்கள் நடந்து வந்தன.
இந்நிலையில் மேற்குவங்க ஆளுநரையும், அவரது மனைவியையும் மதிய விருந்துக்கு வரும்படி சபாநாயகர் பிமன் பானர்ஜி கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஒன்றரை மணி நேரத்துக்குப்பின் அந்த அழைப்பை அவர் ரத்து செய்தார்.

ஆனாலும் ஆளுநர் தங்கார் நேற்று முன்தினம் சட்டப்பேரவைக்கு சென்றார். ஆனால் அவர் நுழைய வேண்டிய வாயில் மூட்டப்பட்டிருந்தது. அவரை வரவேற்க வேண்டிய சபாநாயகரும், ஊழியர்களும் மாயமாயினர். ஊடகத்தினர் முன்னிலையில் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வெளியே காத்திருந்தார். அதன்பின் நிருபர்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சட்டப்பேரவைக்குள் ஆளுநர் சென்றார். இதை இந்திய ஜனநாயக வரலாற்றில் ஆளுநர் சந்தித்த அவமானம் என தங்கார் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மீண்டும் தனது மனைவியுடன் சட்டப்பேரவைக்கு சென்றார். ஆளுநருக்கான நுழைவு வாயில் திறக்கப்பட்டிருந்தது. அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்ததால், சபாநாயகர் வரவில்லை. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு,  சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, ஆளுநர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் தங்கார், ‘‘முதல்வருடன் அனைத்து விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.


Tags : Governor ,West Bengal ,assembly , Governor of West Bengal , assembly , disgrace
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...