×

வாரத்துக்கு 1000 இல்லாமல் காய்கறி வாங்க முடியாது சாம்பார் வெங்காயம் 220க்கு விற்பனை

* உரிக்காமலேயே பெண்களின் கண்களில் தானாக கொட்டும் கண்ணீர்
* காய்கறிகள் விலையும் ஏறியது l பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை

சென்னை: வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து தற்போது சாம்பார் வெங்காயம் ரூ.220 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதேபோல, சில காய்கறியின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது. இது வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளுக்கு கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்துக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ேபான்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்தது. அங்கு பெய்த மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயம் வரத்து என்பது எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு  குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் மாதம் தொடக்கத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.40க்கு விற்றது. இது தற்போது சுமார் 5 மடங்கு அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வெங்காயம் தான் சமையலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதுவே விலை ஏறினால் எப்படி சமையல் செய்ய முடியும் என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் வெங்காயம் உரிக்காமலேயே கண்களில் கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெங்காயம் விலை உயர்வுக்காக கூடுதலாக பட்ஜெட்டில் பணம் ஒதுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். வெங்காயம் விலை தான் உயர்ந்து வந்தது என்று பார்த்தால், தற்போது சில காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:

நவம்பர் மாதம் தொடக்கத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இது தற்போது ரூ.120, ரூ.130 என்று  விற்கப்படுகிறது.  சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. இது தற்போது ரூ.150க்கு விற்கப்படுகிறது. இந்த விலை தொடர்ந்து பொங்கல் வரை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு புதிய வரத்து வந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை. இதேபோல தற்போது சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதாவது பீன்ஸ் கிலோ ரூ.30லிருந்து ரூ.60, கேரட் ரூ.30லிருந்து ரூ.40, காளிபிளவர் ரூ.25லிருந்து ரூ.35, தக்காளி ரூ.20லிருந்து ரூ.30, வெண்டைக்காய் ரூ.30லிருந்து ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.20லிருந்து ரூ.25 என்று விற்கப்படுகிறது. வரத்து குறைவால்தான் இந்த விலை ஏற்றம் உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். மொத்த மார்க்கெட்டில் தான் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) ரூ.150க்கு விற்கப்படுகிறது. இது சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து அதிகபட்சமாக ரூ.220 வரை விற்கப்படுகிறது. மொத்த மார்க்கெட்டில் ரூ.130க்கு விற்கப்படும் பெரிய வெங்காயம் தற்போது ரூ.180 வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். வெங்காயம் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றம் போன்ற காரணங்களால் ஓட்டல் உரிமையாளர்கள் உணவு பொருட்களின் விலையை உயர்த்தலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் பெண்களுக்கு கண்ணீர் வருகிறது. இதற்கு முன்பு 100 ரூபாய் எடுத்து சென்றால் மூன்று நாளைக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம். இப்போது 1000 ரூபாய் எடுத்து சென்றால்தான் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க முடிகிறது’ என்றனர்.

Tags : Vegetable, sambar onions
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...