×

9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக அரசு ஒப்புதல் எதிரொலி உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

புதுடெல்லி: தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் நேற்று உறுதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதிக்கப்படுமா அல்லது 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வெளியாக உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று (6ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்த நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கடந்த இரு நாட்களுக்கு  முன்னதாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் 6 மாவட்டங்களின் வாக்காளர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோரது வாதத்தில், “தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் எதுவும் முடிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற சூழலில் தான் தற்போது மாநிலம் முழுவதும் 9 புதிய மாவட்டங்கள் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கும் அவசர கதியில் தான் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது உள்ள நிலையில் வாக்களர்களுக்கு தாங்கள் எந்த தொகுதியில் இருக்கிறோம் என்பது கூட தெரியவில்லை. இது அவர்களது வாக்கு சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். மேலும் தமிழக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் கிராமம், உள்கிராமம், மற்றும் மாவட்டம் என அனைத்திலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறுவரையறை பணிகளை முடித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தான் எங்களது தரப்பு குற்றச்சாட்டு.  இதைத்தவிர தேர்தல் ஆணையம் தரப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு என குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. இதில் எப்போதோ நடத்திய மறுவரையறை பணிகளை அடிப்படையாக கொண்டு தற்போது தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் புதியதாக எதையும் செய்யவில்லை. அதனால் மாநிலம் முழுவதும் வார்டு மறுவரையறை பணிகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு முடிவடைந்த பின்னர் தான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியில் உத்தரவிட வேண்டும். அதுவரை தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரசிம்மா வாதத்தில்,” தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை என்பது முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. இதில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களும் அடங்கும். இதில் வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும் தான் வர வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், “மாநிலத்தில் வார்டு மறுவரையறை அனைத்தும் முடிந்த பின்னர் தான் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தேர்தல் நடைமுறை என்பது அமலுக்கு வந்த பின்னர் அதற்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. இதில் மனுதாரர் தரப்பில் கூறுவது போன்று புதிய மாவட்டங்கள் தான் பிரச்னை என்றால் அதற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வையுங்கள். ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டாம் என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை நீக்கிவிட்டு தேர்தலை நடத்த முடியுமா அல்லது அந்த மாவட்டம் குறித்த அரசு அறிவிப்பாணையை நிறுத்தி வைத்துவிட்டு பழைய மாவட்ட அட்டவணையின் அடிப்படையில் தேர்தலை நடத்த சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து பிற்பகல் 2 மணிக்கு (நேற்று) தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து சுமார் ஒருமணி நேர உணவு நேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதாவது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து விட்டு, மீதம் உள்ளவைகளுக்கு தேர்தல் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை என குறிப்பிடப்பட்டது. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், “அனைத்து மாவட்டங்களுக்கும் ஒன்றாக தான் தேர்தலை நடத்த வேண்டுமே தவிர, தனித்தனியாக பிரித்து கண்டிப்பாக நடத்தக் கூடாது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதற்கு தான் வாய்ப்பு இல்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டதே என கூறினார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “புதிய வார்டு மறுவரையறை செய்யப்படுவதற்கு முன்னதாக தேர்தலை ஏன் அறிவித்தீர்கள். சட்டத்தை நாம் அனைவரும் பார்கிறோம், அதனால் அதனை மதித்து நடக்க வேண்டும். இதில் தேர்தலுக்கு குறிப்பிட்ட நேரம் என்பது முக்கியம் கிடையாது. ஆனால் அது முறையாக நடத்தப்பட வேண்டும். சட்ட விதிகளை குறுக்கு வழியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என தெரிவித்த நீதிபதிகள்,” தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் அது குறித்து நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? அல்லது மொத்தமாக தேர்தலை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிடுமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

வேட்புமனு தாக்கல்?
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்று தொடங்க இருந்தது. இந்த நிலையில் 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளதால், இதையடுத்து புதிய தேர்தல் அறிவிப்பாணை பட்டியல் தான் தயார் செய்ய வேண்டும். அதனால் திட்டமிட்டப்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘நீதிமன்றத்தால் முடியும்’
உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணையின் போது தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விட்டால் அதற்கு தடை விதிக்க நீதிமன்றத்தால் முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,‘‘முறையான சட்ட விதிகள் பின்பற்றவில்லை என்றால் கண்டிப்பாக தேர்தலை நிறுத்தி வைக்க நீதிமன்றத்தால் முடியும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Tamilnadu ,election , 9 District Elections, Tamil Nadu Government Approval, Local Government Elections
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...