×

பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நாடு முழுவதும் வரத்து குறைவால் வெங்காயம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது உட்பட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், வெங்காய விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஜாமீனில் நேற்று முன்தினம் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பங்கேற்றார். வெங்காய படத்துடன் கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை கூடியதும், சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான 18 இந்தியர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ், பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோரும் அரசை கேட்டுக் கொண்டனர்.

பின்னர் பூஜ்ய நேரத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பந்தியோபாத்யாய், ‘‘வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டது. இது கண்டனத்துக்குரியது’’ என்றார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பதற்கான வரி விதிப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. பொருளாதார மந்தநிலையை சரி செய்ய அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க, பெருநிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தல் இருந்து 22 சதவீதமாக கடந்த செப்டம்பரில் மத்திய அரசு குறைத்தது. இதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இதற்கு பதிலாக வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், 2019 அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக தொடங்கப்பட்டு, 2023க்குள் உற்பத்தியை தொடங்கும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு தலைப்புச் செய்திக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது சிறந்த சீர்த்திருத்த நடவடிக்கையாகும். வரித்துறை அதிகாரிகள் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதே சமயம் தவறு செய்பவர்களை இந்த அரசு தப்பிக்க விடாது. நல்ல சீர்த்திருத்தங்கள் நல்ல பலனையே தரும். இந்த அரசு தொழிலதிபர்களுக்கான அரசு என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் ஏழைகளுக்காகதான் அதிகமாக யோசிக்கிறோம். புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி குறைப்பில் சாப்ட்வேர் டெவலப்மென்ட், சுரங்கம் மற்றும் புத்தக அச்சக நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு வரி சலுகை பொருந்தாது’’ என்றார்.இதைத் தொடர்ந்து, வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  

நாடாளுமன்ற கேன்டீனில்மலிவு விலை சாப்பாடு ‘கட்’
எம்பிக்கள் சாப்பிடுவதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் கேன்டீன் அமைந்துள்ளது. இங்கு விற்கப்படும் உணவுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இதனால், முழு சாப்பாடு ரூ.30, அசைவ சாப்பாடு 60, சப்பாத்தி 2, காபி 5, சிக்கன் பிரியாணி 65, மட்டன் கிரேவி 45 என அனைத்தின் விலையும் மிக குறைவு. இந்த விலைப் பட்டியல் பலமுறை சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த கூட்டத் தொடரில் இருந்து கேன்டீன் மானியத்தை நிறுத்த வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் பரிந்துரைந்தார். இதை அனைத்து எம்பி.க்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதனால், இனி நாடாளுமன்ற கேன்டீனில் அனைத்து பொருட்களும் அவற்றின் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். இது எம்பிக்களுக்கு மட்டுமல்ல, அங்கு வரும் பார்வையாளர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் ஆண்டுக்கு 17 கோடி மிச்சமாகும்.

Tags : corporations , Reduce , tax ,Taxation ,Bill ,passed
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு