இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் மாநிலங்கள் பரிந்துரை அனுப்ப வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அனுப்பும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.உபி.யின் லக்னோவில் சமீபத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், இந்திய தண்டனை மற்றும் குற்றவியல் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்,’ என்று கூறியிருந்தார். இதேபோல், கடந்த சனியன்று ஐதராபாத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, ‘பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கடுமையான குற்றங்களில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் தண்டனை சட்டம், குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது,’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் தங்களின் பரிந்துரைகளை அனுப்பி வைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், புதிய சட்டம் சமூகத்தின் பெண்கள், குழந்தை உட்பட பலவீனமான பிரிவினருக்கு விரைவான நீதியை வழங்க வழி வகுப்பதாகவும் இருக்கும்’’  என்றனர்.

Related Stories:

>