×

உரிமம் பெறாமல் காய்கறி நாற்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு அதிகாரி எச்சரிக்கை

ஈரோடு: காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள்  அனைவரும் விதை விற்பனை உரிமம் பெற்று தான் விற்பனை செய்ய வேண்டும், என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் காய்கறி நாற்றுகள், பூ மற்றும் பழச்செடிகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப பலர் காய்கறி நாற்று பண்ணைகளை அமைத்து விநியோகம் செய்து வருகிறார்கள். நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள்  அனைவரும் விதை விற்பனை உரிமம் பெற்று தான் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் காய்கறி நாற்று பண்ணை அமைக்கும்போது தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதைகளை குவியல் வாரியாக பயன்படுத்தி நாற்றுப்பண்ணை அமைக்க வேண்டும். நாற்றுகளின் விபரங்களை உரிய பதிவேடுகளில் பதிந்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும். நாற்றுகளின் இருப்பு, விற்பனை விபரத்தினை அலுவலகத்திற்கு தெரிவிப்பதோடு தங்களது நாற்று பண்ணைகளில் தரமான, வீரியமான நல்ல மகசூல் தரக்கூடிய நாற்றுகளையே விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம்  தெரிவித்துள்ளார்.



Tags : license Seed inspection officer , Licensing, Vegetable Seedling, Sales and Seed Inspection Officer
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...