×

சூடான் தீ விபத்தில் நாகை இன்ஜினியர் பலியா?....குடும்பத்தினர் மறுப்பு

நாகை: சூடான் தீ விபத்தில் நாகை இன்ஜினியர் ராமகிருஷ்ணன் பலியாகவில்லை என்று அவரது அண்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகர் கார்டோவில் பாஹ்ரி என்ற இடத்தில் சாலுமி என்ற செராமிக் தொழிற்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 18 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (25) என்பவரும் பலியாகி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். விவசாயி ராமமூர்த்தி- முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் திலகா. நாகை கலெக்டர் அலுவலகத்தில் உதவி தாசில்தார் பணியில் உள்ளார். 2வது மகன் பிரபாகரன். இவர் திட்டச்சேரி அருகே தனியார் செராமிக் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் ராமகிருஷ்ணன் (25), சீதாலட்சுமி (25). ராமகிருஷ்ணன் நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ இன்மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு கடந்த 2 ஆண்டு காலமாக தனது சகோதரர் பிரபாகரனுடன் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வந்தார். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி தனது நண்பர்களுடன் இணைந்து ரூ.40,000 சம்பளத்துக்கு சூடான் நாட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், ராமகிருஷ்ணன் இறந்ததாக கூறப்படும் தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதுபற்றி ராமகிருஷ்ணனின் அண்ணன், பிரபாகரன் கூறுகையில், முதலில் எங்களுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில், தொழிற்சாலையில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இருந்தது. எனவே எனது தம்பி ராமகிருஷ்ணன் இறந்து விட்டானோ என்று நினைத்தோம். இப்போது எங்களுக்கு இன்னொரு வீடியோ வந்துள்ளது. அதில், விபத்து நடந்த 1 மணி நேரத்துக்கு முன் ராமகிருஷ்ணன் தொழிற்சாலையில் இருந்து வெளியே செல்வது பதிவாகி உள்ளது. வெளியே சென்ற ராமகிருஷ்ணன் மீண்டும் உள்ளே வந்தானா என தெரியவில்லை. ராமகிருஷ்ணன் உயிரோடு இருந்தால் இந்நேரம் எங்களிடம் செல்போனில் பேசி இருப்பான். தீ விபத்து விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என தொழிற்சாலை நிர்வாகம் ராமகிருஷ்ணனை அறையில் அடைத்துகூட வைத்திருக்கலாம். எனவே எனது தம்பி உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்றார். இந்நிலையில் ராமகிருஷ்ணனின் குடும்பத்தினர் இன்று கலெக்டர் பிரவீன் பி.நாயரை சந்தித்து ஒரு மனு அளிக்க உள்ளனர். அதில், சூடான் நாட்டு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்து குறித்து, அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். எனது தம்பி உயிருடன் இருந்தால், அவனை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட உள்ளனர். இதுபற்றி பற்றி நாகை கலெக்டர் பிரவீன் பி.நாயரிடம் கேட்ட போது, சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தீப்பிடித்தது பற்றியும், ராமகிருஷ்ணன் பற்றியும் இதுவைர அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றார்.


Tags : engineer ,Naga ,fire ,Sudan , Sudan, fire, nagai engineer
× RELATED வீட்டில் எறும்புகளை அகற்றுவதற்காக...