தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எண்ணூரில் இருந்து சிமென்ட் மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை வழியாக கள்ளக்குறிச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 6 மணியளவில் தாம்பரம் இரும்புலியூர் அருகே லாரி வந்தபோது சாலையின் வளைவில் லாரியை டிரைவர் திரும்ப முயற்சித்தார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பின் மீது மோதியது. பின்னர், சாலையிலிருந்து இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தாம்பரம் - பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் சென்று விழுந்தது. இதில் லாரி ஓட்டுனர் கார்த்திகேயனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆணையர் அன்வர் பாஷா தலைமையில் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தஜோதி, ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், லாரி டிரைவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து லாரியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து இரும்புலியூர் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து போலீசார் வாகனங்களை மதுரவாயல் பைபாஸ் வழியாக திருப்பி விட்டு, பின்னர் பைபாஸ் சாலையில் இருந்து வலது புறம் வாகனங்கள் திரும்பி பெருங்களத்தூர் செல்லும்படி ஏற்பாடு செய்தனர்.

Tags : Container truck crashes ,Imbuliyur ,Thambaram Thambaram ,truck crashes , Tambaram, Imbuliyur, Container Lorry topples, Traffic Impact
× RELATED தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே...