×

தருமபுர ஆதீனம் காலமானார்: இன்று இறுதி சடங்கு

மயிலாடுதுறை:  தருமபுர ஆதீனம் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.நாகை மாவட்டம் தருமபுர ஆதீனம் 500 ஆண்டுகளுக்கு முன்பு குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 26வது சன்னிதானமாக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள்12.11.71ல் பதவியேற்றுக் கொண்டார். மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது தலைமையில் தருமபுரத்தில் அனைத்து ஆதீனங்களும் கூடி தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 96 வயதான ஆதீனம் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர், திருவையாறு குமாரசாமி தம்பிரானை 1.2.2017ல்  மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாக திருநாமம் மாற்றி இளைய சந்நிதானமாக்கினார். கடந்த 2ம்தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், நினைவு திரும்பாமலேயே நேற்று  மதியம் 2.40 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.  அவரது உடல் 5.40 மணிக்கு மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது இறுதி சடங்கு ஆதீனம் மேலவீதியில் உள்ள முன்னாள் ஆதீனங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகு இளைய சந்நிதானமாக உள்ள மாசிலாமணிதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 27வது ஆதீனமாக பொறுப்பேற்கிறார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மிகப் பழமையானவற்றில் ஒன்றெனப் போற்றப்படும் தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகாசந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். தருமபுரம் ஆதீனம் மூலம் சமயம் சார்ந்த பணிகள், பொது மக்களுக்கு மருத்துவச் சேவைகள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த பரமாச்சாரியாரை இழந்து வாடும்  அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் ஆதீனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : funeral ,Dharmapura Athene Dies: Today's Funeral , Dharmapura, Athene,Today,funeral
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...